பழனிமலை வீற்று அருளும் வேலா!
மூன்றாவது படைவீடாக சிறப்புப் பெற்ற பழனித் திருத்தலம் பல பெருமைகளை உள்ளடக்கிய முருகன் தலம்.
“அதிசயம் அநேகமுற்ற பழனிமலை
பதினாலு உலகோர் புகழ் பழனி
காசியின் மீறிய பழனி’’
என்றும் திருப்புகழ்ப் பாடல்கள் பலவற்றில் அருணகிரியார் போற்றுகின்றார்.
ஞான தண்டினை ஊன்றி பால வடிவுடன் முருகன் காட்சி தரும் இம்மலை போகர் அருள்பெற்ற புனிதத்தலம். நமக்கு பழனி முருகனைத் தரிசிக்கும் பாக்கியம் ஏற்படாவிடினும், பழனிக்குச் சென்று வந்த பக்தரின் காலில் விழுந்தால் போதும் அல்லது அப்படிக் காலில் விழுந்தவரின் பாதங்களைக் கண்ணிப் ஏற்றிக் கொண்டாலும் போதும் நமக்கு பால தண்டாயுதபாணியின் பரிபூரண அருள் கிடைத்துவிடும் என்று உறுதியுடன் உரைக்கிறார் அருணகிரியார்.
`படிக்கின்றிலை பழனித் திருநாமம்
படிப்பவர் தாள் முடிக்கின்றிலை’’
– என்றும்
“ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி
ஆகம் அணிவார்கள் தங்கள் பாதமலர் சூழும்
அடியார்கள் பதமே துணை’’
– என்றும்
கந்தர் அலங்காரம், திருப்புகழில்
பாடுகிறார் அருணகிரிநாதர்.
திருஆவினன்குடி என்று பழனிமலை திருமுருகாற்றுப்படையிலும், திருப்புகழிலும், கந்த புராணத்திலும் போற்றப்பெறுகிறது.
“திரு என்றால் இலக்குமிதேவி
ஆ என்றால் காமதேனு
இனன் என்றால் சூரியன்
கு என்றால் பூமி
டி என்றால் அக்கினி’’
மேற்கண்ட ஐவராலும் பூஜிக்கப் பெற்ற பெருமை உடையவரே பழனி பாலதண்டாயுதபாணி. ஐவராலும் தொழப் பெற்ற பழனி முருகனை ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள’ தரிசித்து மகிழ்ந்த அமிழ்தத் தமிழ் மழை பொழிந்துள்ளார் அருணகிரியார்.
“வசனமிக ஏற்றி மறவாதே
மனது துயர் ஆற்றில் உழலாதே
இசை பயில் சடாட்சரம் அதாலே
இக பர சௌபாக்யம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே!
பழனிமலை வீற்று அருளும் வேலா!
அசுரர் கிளைவாட்டி மிக வாழ
அமரர் சிறைமீட்ட பெருமாளே!’’
ரத்தினச் சுருக்கத் திருப்புகழில் அனுபூதி ரகசியத்தைப் பதியவைத்து பாடுகிறார் அருணகிரியார். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு பயனில்லாதவற்றைப் பேசியே பலர் பொன்னான நேரத்தை மண்ணாக்கி விடுகின்றனர்.
“பெரிது போக்கிப் புறக் ௳ணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே’’
– என்று தேவாரமும்
“தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி’’
– என்று பாரதியார் பாடலும்
வம்புகள் பேசி வாழ்விழப் போரைக் கண்டிக்கின்றன. இத்திருப்புகழின் முதல் அடியும் இறைவன் புகழ் பேச வேண்டிய உயர்திணை உதடுகள் அஃறிணை உதடுகளாக மாறலாமா என்பதையே; ‘வசனம் மிக ஏற்றி’ என பாடுகின்றது. அஃதிணைகளான மாடுகளுக்கு அகன்ற பெரியவாய் இருக்கின்றது என நாம் அறிவோம். இருந்தும் அவற்றை ‘வாயில்லா ஜீவன்’ என்று நாம் குறிப்பிடுகின்றோம். ஒரு சிறுவன் கேட்டான்; இலை, தழை, பருத்தி, புண்ணாக்கு என எல்லாவற்றையும் மாடுகள் உண்கின்றன.
போதாது என்று தற்கால மாடுகள் போஸ்டர்களை வேறு சாப்பிடுகின்றன. சுவரொட்டிகள் மாடுகள் சாப்பிடும் ரொட்டிகளாகவே மாறிவிட்டன. இவ்வளவு சாப்பிடும் வாய் உள்ள மாட்டை ‘வாயில்லா ஜீவன்’ என்று அழைப்பது ஏன்? அதற்கான பதில் இப்படி வந்தது;‘‘சரியான கேள்வி மாட்டின் வாய் வெறுமே சாப்பிடுகிற வாய்தான்! சாப்பிடும் வாயை சான்றோர்கள். வாயாக மதிப்பதே கிடையாது இறைவனை கூப்பிடும் வாயே சிறப்புடையுது. நாமும் வம்பு பேசி, உண்டு கொண்டிருந்தால் வாயில்லா ஜீவன்தான்.
‘வாயே! வாழ்த்து கண்டாய்
வாழ்த்த நாள் வாயும், நினைக்க மட
நெஞ்சும்!
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே!’’
– என்றும் பாடுகின்றனர் நாயன்மார்கள்.
`வாழ்த்த வேண்டிய மூல பரம்பொருளை உணராது
வம்புகளில் உழன்று கொண்டிருக்காதே!
கவலையிலேயே சிக்குண்டு காலம் கழிக்காதே!
ஆறெழுத்து மந்திரம் ஆகிய உயரிய சரவணபவ
என்னும் சடாட்சரத்தை மறவாமல் ஓது.
இம்மை, மறுமை இரண்டிலும் இன்பம் தரக்கூடிய உரிய இறைவன்
சரணாரவிந்தங்களை சதா
காலம் எண்ணி நிறைவடைக!
அசுரக் கூட்டத்தை அடியோடு அழித்து அமரர்களுக்கு தேவலோகத்தை
அளித்த கருணைக் கடலான கந்தவேளின் பாத மலர்களை
எப்போதும், முப்போதும் மறவாதே!’’
அரிய அறிவுரையை அலைபாயும் மனித நெஞ்சிற்கு ஆறுதலாக இப்பாடல் மூலம் அளித்துள்ளார், அருணகிரிநாதர்.
திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்
The post திருப்பம் தரும் திருப்புகழ்!20 appeared first on Dinakaran.