3. காஞ்சீபுரம் (திருக்கச்சி ஏகம்பம் / கச்சி அத்திகிரி)
காஞ்சீபுரம், பல்லவர்களின் தலைநகரமாக விளங்கிய ஊர். சைவம் வைணவம் இரு கொள்கைகளும் தழைக்கும் திருத்தலம். இந்த நகரில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் ஐந்து உள்ளன.
1. திருக்கச்சி ஏகம்பம் (சம்பந்தர் 33, அப்பர் 83, சுந்தரர் 11)
2. திருக்கச்சி மேற்றளி (அப்பர் 10, சுந்தரர்10)
3. ஓணகாந்தந்தளி (சுந்தரர் 11)
4. கச்சி அனேகதங்காவதம் (சுந்தரர் 10)
5. கச்சி நெறி காரைக்காடு (சம்பந்தர் 11)
சுந்தரர், திருவொற்றியூரில் பார்வை இழந்து, கண்ணொளி வேண்டி பல தலங்களில் பாடிக் கொண்டு காஞ்சியை நோக்கி வருகிறார். இங்கு பதிகம் பாடி இடக் கண்ணில் பார்வை பெறுகிறார். இப்பதிகத்தில் இருந்து இரண்டு பாடல்கள் பின்வருமாறு;
“ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை
ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்
சீலந் தான்பெரி தும்முடை யானைச்
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே’’
“எள்க லின்றி இமையவர் கோனை
ஈச னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே’’
இறைவன் விஷத்தை விரும்பி உண்டவர், அனைத்துக்கும் முதலானவர், தேவர்களால் தொழப்படுபவர், அடைய முடியாத பெருமையை உடையவர், தன்னைச் சிந்திப்போர் சிந்தையில் காலகாலமாய் இருப்பவர், ஏலவார் குழலி அம்மை அவரை தினமும் வணங்குகிறார்; அப்படிப்பட்ட ஏகம்பனைக் காண எனக்குக் கண் வேண்டும். பத்தாவது பாடலில் அவர் காஞ்சியின் தல வரலாற்றை விளக்குகிறார். இறைவன் கம்பா நதியில் வெள்ளத்தைக் கொண்டு வர, ஏலவார் குழலி மண்லிங்கம் அழியக் கூடாது என்பதால், அதனைத் தழுவ இறைவன் வெளிப்பட்டார். சுந்தரர் இந்தத் திருவிளையாடலைப் புரிந்த இறைவனைக் கள்ளக் கம்பன் என்று அழைக்கிறார். இறைவனின் நண்பனாகும் அளவிற்கு உயர்ந்தவர் என்பதால் சுந்தரரால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும்.
காஞ்சீபுரத்தில் 14 திவ்ய தேசக் கோயில்கள் உள்ளன. அவை;
1. திருக்கச்சி அத்திகிரி – வரதராஜப் பெருமாள் கோயில் – திருமங்கை ஆழ்வார் (4), பூதத்தாழ்வார் (2), பேயாழ்வார் (1).
2. அஷ்டபுஜம் – திருமங்கை ஆழ்வார் (11), பேயாழ்வார் (1).
3. திருத்தண்கால் – திருமங்கை ஆழ்வார் (1), நம்மாழ்வார் (1).
4. திருவேளுக்கை – திருமங்கை ஆழ்வார் (1), பேயாழ்வார் (3).
5. திருநீரகம் – திருமங்கை ஆழ்வார் (1).
6. திருப்பாடகம் – திருமழிசை ஆழ்வார் (2), திருமங்கை ஆழ்வார் (2), பேயாழ்வார் (1), பூதத்தாழ்வார் (1).
7. திரு நிலாத்திங்கள் துண்டம் – திருமங்கை ஆழ்வார் (1).
8. திரு ஊரகம் – திருமழிசை ஆழ்வார் (2), திருமங்கை ஆழ்வார் (4).
9. திருவெஃகா – திருமழிசை ஆழ்வார் (3), திருமங்கை ஆழ்வார் (6), பொய்கை ஆழ்வார் (1), பேயாழ்வார் (4), நம்மாழ்வார் (1).
10. திருக்காரகம் – திருமங்கை ஆழ்வார் (1).
11. திருக்கார்வானம் – திருமங்கை ஆழ்வார் (1).
12. திருக்கள்வனூர் – திருமங்கை ஆழ்வார் (1).
13. திருப்பவழவண்ணம் – திருமங்கை ஆழ்வார் (1).
14. திருப் பரமேச்வர விண்ணகரம் – திருமங்கை ஆழ்வார் (10).
இவற்றுள் திருநிலாத்திங்கள் துண்டம், ஏகாம்பரேஸ்வரர் கோயில் பிராகாரத்திலும், திருக்கள்வனூர், காமாட்சி அம்மன் கோயில் சந்நதியிலும் உள்ளன. நான்கு திவ்ய தேசக் கோயில்களான திருநீரகம், திருக்காரகம், திரு ஊரகம், திருக்கார்வானம் ஆகியன உலகளந்த பெருமாள் கோயிலில் உள்ளன. ஒரே பாசுரத்தில் (2059) திருமங்கை ஆழ்வார் திருநீரகம், திரு நிலாத்திங்கள் துண்டம், திரு ஊரகம், திருவெஃகா, திருக்காரகம், திருக்கார்வானம், திருக்கள்வனூர் ஆகிய ஏழு திவ்ய தேசப் பெருமாளை மங்களாசாசனம் செய்கிறார். இதே பாசுரத்தில், அவர் பேரகம் (அப்பக்குடம்) மற்றும் உச்சிப் (திருப்பதி) பெருமாளையும் மங்களாசாசனம் செய்கிறார்.
“நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மலோய்!
நிலாத் திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி
ஊரகத்தாய்! ஒண்துறைநீர் வெஃகா உள்ளாய்! உள்ளுவார் உள்ளத்தாய்!
உலகம் ஏத்தும்
காரகத்தாய்! கார்வானத் துள்ளாய்! கள்வா!
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய்! பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமானே! உன் திருவடியே பேணினேனே’’
‘என் நெஞ்சில் உள்ளாய். உன் திருவடியே பேணினேனே’ என்று ஆழ்வார் உள்ளம் கசிவது போலவே, பல பாடல்களில் சம்பந்தரும், அப்பரும் இறைவன் அவர்களுக்குள் இருப்பதைச் சொல்லி நெகிழ்ந்துள்ளனர். முதல் பாடலிலேயே சம்பந்தர் ‘உளம் கவர் கள்வன்’, என்றும் கோளறு திருப்பதிகத்தில், ‘உளமே புகுந்த அதனால்’ என்றும் கூறுகிறார்.
திருவெஃகாவில் பெருமாள் பெயர் யதோத்காரி (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்). திருமழிசை ஆழ்வார் சொன்னதைச் செய்ததால் அந்தப் பெயர்.
அந்த விவரம் என்ன?
காஞ்சி அரசன் இளமைபெற ஆழ்வாரின் சீடன் கணிக்கண்ணனிடம் குருவிடம் கேட்குமாறு கூறுகிறான். ஆழ்வார் மறுக்கவே கணிக் கண்ணனை நாடு கடத்துகிறான் மன்னன். ஆழ்வாரும் கணிக் கண்ணனுடன் செல்ல முடிவு செய்து, கூடவே பெருமாளையும் பாயைச் சுருட்டிக் கொண்டு தன்னோடு வருமாறு அழைக்கிறார்.
“கணிக்கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்’’
உடனே பெருமாளும் புறப்பட்டுவிட, பயந்துபோன அரசன் மன்னிப்பு கேட்டு ஆழ்வாரை மறுபடியும் அழைக்கிறான். ஆழ்வாரும் வந்து தன்னோடு பெருமாளையும் வந்து கோயிலில் பாய் விரித்துப் படுக்குமாறு கூறுகிறார்.
“கணிகண்ணன் போக்கொழிந்தான்
காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் –
துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்’’
வேகமாக வந்த பெருமாள், ஆழ்வார் சொல் கேட்கும் அவசரத்தில், திசை மாறிப் படுக்கிறார். ஆழ்வார் சொன்ன வண்ணம் செய்ததால் அவருக்கு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று பெயர். (ஆனால் இந்த இரண்டு பாடல்களும் பிரபந்தத்தில் சேர்க்கப் படவில்லை).
4. மதுரை (ஆலவாய் / கூடல்)
மதுரை என்ற புனிதமான தலம், கூடல் என்றும் திரு ஆலவாய் என்றும் அழைக்கப்படுகிறது. கடம்பவனம் என்றும் பெயர் உண்டு. உமையவளே மலையத்வஜ பாண்டியன் மகளாக அவதரித்து மதுரையை ஆண்டாள். இறைவன் மதுரை வந்து உமையவளை மணந்து இருவரும் மீனாட்சி சுந்தரேஸ்வரராக அருள் பாலிக்கின்றனர். இது மிகப் பழமையான கோயில், ஸ்ரீமத் பாகவதத்தில் கடம்பவனம் என்று சொல்லப்படுகிறது. சம்பந்தர் (110), அப்பர் (72) இருவரும் பாடியுள்ளனர்.
இந்தத் தலத்தில், பாண்டியன் நெடுமாறனின் சூலை நோயைக் குணப்படுத்தி சைவத்தை நிலை நாட்டினார், சம்பந்தர். அரசி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையும், சிவனடியார்கள் (நாயன்மார்கள்). மன்னரோ சமணர்களின் பிடியில். அரசியார் சம்பந்தரை மதுரைக்கு அழைக்க, அவர் பதிகம் பாடி மன்னனின் சூலை நோயைக் குணப்படுத்தி அவனை சைவத்திற்கு மறுபடியும் கொண்டு வந்தார்.
“மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே’’
இந்தப் பாடலில் சம்பந்தர், மங்கையர்க்கரசியின் சிவத் தொண்டு பற்றி கூறுகிறார். இறைவன் தீயின் பொன் நிறம் உடையவன் என்றும் நூல் வேதங்களை அருளியவன் என்றும் கூறி, இறைவன் அங்கயற்கண்ணியோடு அமர்ந்த ஊர் ஆலவை என்றும் சிறப்பிக்கிறார். இறைவன் உமையவளோடு இன்புற்று விளங்கும் இடம் ஆலவை என்று கூறும் போது எங்கெல்லாம் இறைவன் இறைவியோடு காட்சி தருகிறாரோ, எல்லா இடங்களும் மதுரைப் பதியே என்று நாம் கொள்ள வேண்டும்.
‘கூடல் ஆலவாயிலாய் குலாயதென்ன கொள்கையே’ (சம்பந்தர் 3.52.1) இந்தப் பதிகத்தில் ஆலவாய் இறைவன் இறைவியோடு குலாவும் இடம் என்று கூறுகிறார். முன்னர் ஆலவாய் இறைவன் இறைவியோடு இன்புறுகின்ற இடம் என்றும் கூறுகிறார். இறைவனே எம் தந்தை, இறைவியே எம் தாய். மகாகவி பாரதியார் ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ என்று கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆலவாயில் சம்பந்தர் திருநீற்றுப் பதிகத்தை அருளி மன்னனை சூலை நோயிலிருந்து காப்பாற்றுகிறார்.
“மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.’’
ஆலவாயான் திருநீறு வேதத்தில் உள்ளது என்றும் துயர் தீர்ப்பது என்றும் கூறுகிறார். இடர் களையும் பதிகத்தில் அவர் ‘எம்பெருமா னணிந்த நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே’ என்றுகூறி இறைவனின் திருமேனி மேல் அபிஷேகிக்கப்பட்ட விபூதியை அணியும் எல்லோரின் இடர்களையும் களையும் பொறுப்பு இறைவனுக்கே என்று கூறுகிறார்.
இங்குள்ள திருமால், கூடல் அழகராக மதுரையில் வீற்றிருக்கிறார். இந்தக் கோயில் மீனாட்சி கோயிலிலிருந்து 1.2 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்தத் திவ்ய தேசத்திற்கு திருமழிசை ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் ஆளுக்கு ஒரு பாசுரம் பாடியுள்ளனர். திருமாலிருஞ்சோலை திவ்ய தேசம் மதுரையிலிருந்து 21 கி.மீ தூரத்திலும், திருமோகூர் திவ்ய தேசம், 16 கி.மீ தூரத்திலும் உள்ளன. திருமாலிருஞ்சோலை திவ்ய தேசத்தைப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளனர் – பெரியாழ்வார் (34), ஆண்டாள் (11),
திருமங்கை ஆழ்வார் (33), பூதத்தாழ்வார் (3),
பேயாழ்வார் (1), நம்மாழ்வார் (46).
“மாலிருஞ்சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால்வேதக் கடல் அமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளின்
மேலிருந்த விளக்கை விட்டுசித்தன்
விரித்தனனே’’
இந்த அருமையான பாசுரத்தில் பெரியாழ்வார், அழகர் மலையில் வாழும் மலை என்று குறிப்பிடுகிறார். அரங்கனை ‘பச்சைமா மலை போல் மேனி’ என்று தொண்டரடிப் பொடியாழ்வார் குறிப்பிட்டதை நாம் அறிவோம். அழகரைப் பெரியாழ்வார் ‘நாலிரு மூர்த்தி’ என்று குறிப்பிட்டது அஷ்டாக்ஷரத்தைக் குறிக்கும். பெருமாளின் நான்கு பெயர்களான வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருத்தன் என்ற பெயர்களையும் குறிக்கும். பெருமாளே வேதம், உபநிஷத்து ஆகியவற்றின் பொருள் ஆவார்.
பேராசிரியர் ஜி.ஸ்ரீநிவாசன்
The post பதிகமும் பாசுரமும் -பாகம் 2 appeared first on Dinakaran.