
பெங்களூரு,
கர்நாடக அரசு, பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், மின்உற்பத்தி செய்யவும் செயல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு கர்நாடக அரசு ரூ.15 ஆயிரம் கோடி செலவாகும் என கணக்கிட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசின், ஜல்சக்தி துறை, சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளது.ஆனால் மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகத்திற்கு உபரி நீர் கிடைக்காது என தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் தமிழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.
இருப்பினும் கர்நாடக அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது. அதாவது அணை அமையும் பகுதியில் எவ்வளவு வனப்பகுதி நிலம், விவசாய நிலம் கையகப்படுத்த வேண்டும் என்ற பணிகளை கண்டறிய வனத்துறை, வருவாய்த்துறை குழுக்களை நியமித்தது.
அந்த குழுவினர் அணை அமையும் பகுதியில் எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றும், எவ்வளவு மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை தயார் செய்துள்ளது. இதனால் அணை கட்ட தேவையான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதாவது நிலத்தை கையகப்படுத்தும் பணியை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த அணை திட்டத்தை செயல்படுத்த ராமநகரில் கர்நாடக அரசு அலுவலகம் திறந்துள்ளது.
சமீபத்தில் கூட கர்நாடக நீர்ப்பாசனத்துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டோம் என்று கூறினார் இதற்கிடையே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு கர்நாடக காங்கிரஸ் அரசு தான் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பா.ஜனதாவை சேர்ந்த எம்.பி.க்கள், கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரி குமாரசாமி நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரசார் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய கனரக தொழில் துறை மந்திரி குமாரசாமி மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகதாது திட்டத்தை செயல்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரசார் கூறுகிறார்கள். தமிழகத்தில் அவர்களது கூட்டணி கட்சி ஆட்சி தான் நடக்கிறது. காங்கிரசார் முதலில் அவர்களது கூட்டணி கட்சிகளின் சம்மதத்தை பெற வேண்டும். இந்த அணை திட்டத்தால் தமிழகம் பாதிக்கப்படாது என கூறி தமிழக மக்களின் நம்பிக்கையை அவர்கள் பெற வேண்டும். ஆனால் அதற்கு காங்கிரஸ் கட்சிக்கு சக்தி இல்லை. அத்துடன் தமிழகத்தையும், அவர்களது கூட்டணி கட்சிகளையும் எதிர்க்கும் சக்தி கூட காங்கிரசாருக்கு இல்லை.
தமிழக அரசிடம் அனுமதி பெறாமல் மேகதாது திட்டத்தை செயல்படுத்த அலுவலகத்தை திறந்ததால் என்ன பயன்?. மேகதாது அணை கட்ட உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்று காங்கிரஸ் கட்சி தான் கூறியது. ஆனால் 2½ ஆண்டுகளாக எந்த முயற்சியும் எடுக்காமல் நேரத்தை வீணடித்துவிட்டனர். தற்போது எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள். முதலில் காங்கிரசார் தமிழகத்தில் உள்ள அவர்களது கூட்டணி அரசிடம் மேகதாது திட்டத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்தால், அடுத்த 5 நிமிடத்தில் பிரதமர் மோடியிடம் நானே பேசி மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி பெற்று தந்துவிடுவேன்" என்றார்.