சென்னை மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. இதனிடையே மூலதன பணி மேற்கொள்ள பெறப்பட்ட கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி கடந்த நிதியாண்டில் ரூ.111 கோடிக்கு மேல் உயர்ந்தது. இந்நிலையில் மாநகராட்சியின் வருவாயை எந்தெந்த இனங்களில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என ஆய்வு செய்து, விரைந்து செயல்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சொத்து வரியை யாரேனும் குறைவாக காட்டி இருந்தால், ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து, சரியான வரியை நிர்ணயித்து வசூலிக்கவும், அனைத்து கடைக்காரர்களிடமும், நிறுவன பணியாளர்களிடமும் தொழில்வரி வசூலிப்பதை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் சொத்து வரி நடப்பாண்டில் ரூ.1,750 கோடி வரையும், தொழில் வரி ரூ.550 கோடி வரையும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.