சென்னை: மெரினா பாரம்பரிய வழித்தடம் திட்டத்திற்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த நிலையில் மெரினா கடற்கரை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக சென்னை சாந்தோம் பேராலயத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை சுமார் 4 கி.மீ தொலைவுக்கு மெரினா கடற்கரை புதுப்பொலிவு பெறுகிறது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தற்போது மெரினா கடற்கரையையும் அதன் மேற்கு பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரிய கட்டிடங்களையும் இணைக்கும் வகையில் காமராஜர் சாலை நடைபாதையை மேம்படுத்தும் திட்டம் ரூ.10 கோடி செலவில் தொடங்கப்படும் என 2024-25 பட்ஜெட் கூட்டத்தொடரின் அறிவிக்கப்பட்டது. இதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சாந்தோம் பேராலயம் முதல் நேப்பியர் பாலம் இடையிலான நடைபாதையில் உள்ள பாரம்பரிய கட்டமைப்புகள் விளக்குகளால் அழகுபடுத்தப்படும், மேலும் பாதைகள் தெரு விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
இந்த பகுதியில் எழிலகம், சென்னை பல்கலைக்கழகம், பொதுப்பணித்துறை கட்டிடம், பிரசிடென்சி கல்லூரி, ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனம், ஐஸ் ஹவுஸ் (விவேகானந்தர் இல்லம்), குயின் மேரி கல்லூரி, டிஜிபி அலுவலகம் மற்றும் பிற பாரம்பரிய கட்டிடங்கள் உள்ளன. இந்த திட்டத்தின் கீழ், ஸ்டாண்டுகளை மேம்படுத்தி, பாரம்பரிய கட்டிடங்களுக்கு அருகில் பார்வை தளங்கள் உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரி கூறியதாவது:
தற்போதுள்ள பெரும்பாலான மேம்பாடுகள் கடற்கரை பகுதிக்கு முன்னுரிமை அளித்துள்ளன, ஏனெனில் நகராட்சி நீரூற்றுகள், தோட்டங்கள் மற்றும் பிறவற்றை வழங்கியுள்ளது. அடுத்தகட்டமாக நேப்பியர் பாலம் அருகில் டவர் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதனால் மெரினாவை முழுமையாக காண முடியும். இந்த திட்டத்தை சிஎம்டிஏ மட்டும் செய்யவில்லை, மாநகராட்சி, வனத்துறை, பொது பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து செயல்படுத்தி வருகிறது. தற்போது டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மெரினா பாரம்பரிய வழித்தட திட்டத்துக்கு டெண்டர் வெளியிட்டது சிஎம்டிஏ appeared first on Dinakaran.