சென்னை,
நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
மேலும் மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் வரும் 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' என துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
இப்படம் கடந்த 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சொந்த ஊர், உறவு ஆகியவற்றைப் பிரிந்து சென்று, சிறிது காலம் வாழ்ந்துவிட்டு மீண்டும் வீடு திரும்புகிற ஒருவரின் கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் 'மெய்யழகன்' படத்தை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'மெய்யழகன் பார்த்தேன், மனித வாழ்வின் ஏக்கமே பெரும் பிரியத்தில் உருகி வழிவது தான் என்பதை எந்த சமரசமும் இல்லாமல் நிரூபித்து இருக்கிறார்கள் . இதனை சாத்தியப்படுத்திய நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, இயக்குனர் பிரேம்குமார் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.