
சென்னை,
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும். மேலும் மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 27-ந்தேதி உருவாக வாய்ப்பு இருக்கிறது.
இதனால், தென்மேற்கு பருவமழை கேரளாவில் 2 நாட்களில் தொடங்கி, பின்னர் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பரவ வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வுகளால், இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் மித அளவிலான மழையும், சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக முதல் அதி கனமழை வரையிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளையும் (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுதினமும் (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனை முன்னிட்டு சிவப்பு எச்சரிக்கையை நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.