மெனோபாஸ் குறித்து ஐயங்கள்!

3 weeks ago 6

நன்றி குங்குமம் தோழி

பொதுவாகவே நாற்பத்தைந்து வயதை கடந்த பெண்களுக்கு மெனோபாஸ் குறித்த அச்சங்கள்
நிறையவே இருக்கும். காரணம், இதனால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை சிரமத்துடன் கடக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள். இது போன்ற தேவையற்ற அச்சங்களை தவிர்த்து மாற்றங்களை ஏற்றுக்கொண்டு எவ்வாறு எளிதாக கையாளலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அறிகுறிகள்

மாதவிடாய் முறையற்ற சுழற்சியில் ஏற்படும். அந்த சமயத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும். பத்து முதல் 15 நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்கும். ஈஸ்ட்ரோஜன் லெவல் குறையும். ஹாட்ப்ளாஷ் எனப்படும் அதிகப்படியான வியர்வை, படபடப்பு இருந்தாலும் அது சில வினாடிகளில் சமநிலையை அடையும். மூட் ஸ்விங், தேவையற்ற மனக்குழப்பங்கள் இருக்கும். இரவு உறக்கம் குறையும். உடல் மற்றும் மனச் சோர்வு ஏற்படும். ஒரு வருடம் முழுதும் மாதவிடாய் வரவில்லை எனில் மெனோபாஸ் வந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளலாம்.

ப்ரீ மெனோபாஸ் ஆலோசனைகள்

பெண்களுக்கு தங்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வரை பயப்பட தேவையில்லை. ஆனால் அதிக உதிரப்போக்கு இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். மனக்குழப்பம், டிப்ரஷன் மற்றும் ஸ்ட்ரெஸ் அதிக அளவு இருந்தாலும் ஆலோசனை பெறுவது அவசியம். தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை, பெண் உறுப்புகளில் வறட்சி, யூரினரி இன்பெக்‌ஷன் இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும். சிலருக்கு அடிக்கடி சிறுநீர் போகும் உணர்வும் இருக்கும். ஒரு சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும்.

ப்ரீ மெனோபாஸ் பிரச்னைகள்

உதிரப்போக்கு அதிகமாகும் போது ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை உணவு மூலம் கண்ட்ரோல் செய்யலாம். ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சுய மருத்துவம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஈஸ்ட்ரோஜன் குறைவால் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு எலும்புகள் பலவீனம் அடையும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதற்கான விட்டமின், கால்சியம்
மாத்திரைகளை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து எடுத்துக் கொள்ளலாம்.

மெனோபாஸ் ஆரோக்கியம்

பெண்கள் முதலில் தங்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
இரவில் கட்டாயம் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவை. நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். பச்சை காய்கறிகள், சத்து மிக்க பழங்கள், கீரை வகைகள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி, யோகா, தியானம் உடல்நலனோடு மன நலனையும் கட்டுக்குள் வைக்கும்.மெனோபாஸ் குறித்த பிரச்னைகளை தயக்கமின்றி குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதன் மூலம் அவர்களும் உங்களின் மனநிலையை புரிந்து கொள்வார்கள். உங்களின் சிரமமான காலக்கட்டங்களை கடந்து வர அவர்களும் உங்களுக்கு உதவுவார்கள். தேவையெனில் மருத்துவர் மற்றும் மனநல ஆலோசகர்
களின் உதவியினை பெறலாம். பெண்கள் தங்கள் உடல்நல ஆரோக்கியத்தில் அக்கறையை செலத்தினாலே எந்தப் பிரச்னைகளையும் சுலபமாக வென்றுவிடலாம்.

தொகுப்பு:தனுஜா, சென்னை.

The post மெனோபாஸ் குறித்து ஐயங்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article