சென்னை,
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வரும் நிலையில், மெட்ரோ ரெயில்கள் அதிகாலை முதல் இடையூறு இல்லாமல் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"அதிகாலை 5 மணி முதல் மெட்ரோ ரெயில்கள் இடையூறு இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 10.30 நிலவரப்படி, மெட்ரோ நிலையங்களின் அனைத்து வாயில்களும் அணுகக்கூடிய வகையில் உள்ளன. மெட்ரோ ரெயில் நிலையங்களில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.
இன்று(15-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வானிலை நிலவரத்தைப் பொறுத்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.