நெல்லை: நெல்லை மாவட்டம் விகேபுரம் அருகேயுள்ள சிவந்திபுரம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த பகவதி-அம்மா பொண்ணு தம்பதியின் மகன் இசக்கிமுத்து(34). இவர் தற்போது மெக்சிகோவில் பணிபுரிந்து வருகிறார். அங்கு அவர் தங்கி இருந்த குடியிருப்பில் வசித்து வரும் அந்நாட்டை சேர்ந்த அசுவாணி லோபெஸ்(32) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் இசக்கிமுத்து தனது காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு மருமகள் என்பதால் முதலில் தயக்கம் காட்டிய இசக்கிமுத்துவின் பெற்றோர் பிறகு தனது மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
இதையடுத்து மெக்சிகோவில் ஏற்கனவே இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் தனது கணவரின் விருப்பப்படி அவரது சொந்த ஊரில் இந்து முறைப்படி திருமணம் வரவேற்பு விழா வைபவம் செய்து கொள்ள அசுவாணி லோபெஸ் சம்மதித்துள்ளார். அதன்படி கல்யாணம் முடிந்த கையோடு தம்பதி இந்தியா திரும்பிய நிலையில் நேற்று இசக்கிமுத்துவின் சொந்த ஊரான விகேபுரத்தில் இந்து முறைப்படி இருவருக்கும் திருமண வரவேற்பு வைபவம் நடைபெற்றது.
இதில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளானோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். தொடர்ந்து பாபநாசம் பாபநாச சுவாமி கோயிலில் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
The post மெக்சிகோ நாட்டு பெண்ணை கரம் பிடித்த நெல்லை இளைஞர் appeared first on Dinakaran.