கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 500 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வழக்கு ஜூலை 19க்கு ஒத்திவைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு, ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது.
சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கலவரம் தொடர்பாக, 300க்கும் மேற்பட்டவர்கள் பேர் கைது செய்யப்பட்டனர். மாணவியின் உயிரிழப்பும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரமும் தமிழகம் முழுவதும் அன்றைய நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு தற்போது வரை விசாரித்து வரும் நிலையில், பள்ளி சூறையாடல் வழக்கில் 615 பேர் ஒரே நேரத்தில் ஆஜராக சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளி கலவர வழக்கில் 500க்கும் மேற்பட்டோர் இன்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் விசாரணைக்கு ஆஜராவதால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் இன்று 500 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 19க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
The post கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 500 பேர் ஆஜரான நிலையில் வழக்கு ஜூலைக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.