டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது அனைத்து வயதினரிடமும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தனித்தகவல்கள், வங்கி கணக்கு, பணப்பரிமாற்றம் என்று மனிதர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக செல்போன் திகழ்கிறது. அவசியத்துக்கு பயன்படும் செல்போன்கள் அவசியமில்லாத விஷயங்களை உள்ளடக்கி ஊர்வலம் வருவதில் தான் சிக்கலே எழுகிறது. உலகில் எந்த இடத்தில் சம்பவங்கள் நடந்தாலும் அதை உடனே பிரதிபலிக்கிறது.
அது நமக்கு அவசியமான செய்தி தானா?, அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் தானா என்று யாரும் ஆராய்வது இல்லை. அதை அலட்சியப்படுத்தி கடந்து செல்வதும் இல்லை. அந்த சம்பவத்தின் ஒலி ஒளியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூழ்கி விடுகிறார்கள். டைம்பாஸ் என்று பலர் நினைத்து இந்த ரீல்ஸ்களை பார்க்க ஆரம்பித்து அதன் பிறகு அடிமையாகிவிடும் கொடுமை ஏராளமாக நடக்கிறது. சிறுவர்கள், சிறுமிகள் ரீல்ஸ் மோகத்தில் சிக்கிவிடுவதால் பள்ளியில் ஆசிரியர்கள் கண்டித்தால் கோபம் வருகிறது.
வீட்டில் பெற்றோர் செல்போனை பறித்தால் அவர்கள் மீது கோபம் வருகிறது. சிலர் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள். சிலர் விபரீத முடிவை எடுத்து விடுகிறார்கள். தங்கள் நண்பர்கள் யாராவது ரீல்ஸ் போட்டு அதிக லைக்குகளை வாங்கி பெருமை அடைந்துவிட்டால், அதே போல் தாங்களும் வித்தியாசமான வீடியோவை பதிவு செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் துடிக்கிறார்கள். இதற்காக ஆபத்தை உணராமல் பலவித ரிஸ்க் எடுத்து வீடியோ பதிவிடுகிறார்கள்.
உதாரணமாக வேகமாக ஓடும் ரயிலில் தாவி ஏறுவது, ரயில் கூரை மீது ஏறி நடனமாடுவது, தண்டவாளத்தில் சாகசம் செய்வது, ஆறுகள், நீர்நிலைகளில் ஆபத்தாக விளையாடுவது, மலை உச்சியில் சென்று செல்பி எடுப்பது என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி செய்து உயிரை விட்டவர்கள் அதிகம். ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டிய ஆன்ட்ராய்டு போன் அவர்கள் அழிவுக்கு காரணமாகிவிட்டது. தங்கள் அறிவை மட்டுப்படுத்தும், ஆற்றலை செயலிழக்க செய்து மந்தப்படுத்தும் ஒரு விஷயத்தில் அவர்கள் மூழ்கியதால் ஏற்பட்ட நிலை தான் அது.
இதை ப்ரெயின் ராட் என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு நபரின் மனம் அல்லது அறிவுசார் நிலை மோசமடைந்து மூளை மழுங்கிப்போவதை குறிக்கும் வார்த்தை தான் ப்ரெயின் ராட். இது பயனற்ற அல்லது முக்கியமற்ற உள்ளடக்கங்களை அதிகப்படியாக பார்ப்பதன் விளைவாக ஏற்படும் நிலை என்று கருதப்படுகிறது. ப்ரெயின் ராட் வார்த்தை இணையம் உருவாக்கப்படுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பயனற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி அதுவே உலகம் என்று மாறிவிடுவதால் அவர்களுக்கும், அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் பல்வேறு இடையூறுகளை இவர்கள் செய்கிறார்கள். இதை தான் ப்ரெயின் ராட் என்ற வார்த்தை மூலம் குறிப்பிடுகிறார்கள். 2023-24ம் ஆண்டு இடையில் 230 சதவீதம் இது அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ப்ரெயின் ராட் என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி இந்த ஆண்டின் வார்த்தையாக குறிப்பிட்டுள்ளது. சமூக ஊடக ரீல்ஸ்களில் பல மணிநேரம் தங்களை அறியாமல் ஸ்க்ரோல் செய்பவர்களைத்தான் இப்படி குறிப்பிட்டுள்ளார்கள்.
The post மூளை மழுங்கல் appeared first on Dinakaran.