'மூளை மங்கிவிட்டது' இஷான் கிஷனை கடுமையாக விமர்சித்த சேவாக்

3 hours ago 2

ஐதராபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கிளாசென் 71 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 146 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 70 ரன்கள் அடித்தார். பவுல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அவுட் ஆனது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இஷான் கிஷன் 1 ரன் அடித்திருந்தபோது வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிக்கெல்டனிடம் கேட்ச் முறையில் வெளியேறினார். அதாவது பந்து லெக்சைடில் அவரது பேட்டை உரசுவது போல் சென்றது. ஆனால் விக்கெட் கீப்பரோ, மும்பை வீரர்களோ யாரும் அப்பீல் செய்யவில்லை.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடுவர் அவுட் என்று விரலை உயர்த்தினார். அதற்கு இஷான் கிஷனும் கேட்ச் ஆனதாக நினைத்து பெவிலியன் நோக்கி நடந்தார். ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெரியவந்தது. கள நடுவர் மற்றும் இஷான் கிஷனின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும். அது மூளை மங்கிப்போனதைத்தான் குறிக்கிறது. இஷான் கிஷன் குறைந்த பட்சம் நடுவர் தனது முடிவை எடுக்கும் வரை காத்திருக்கலாம். நடுவரை அவரது வேலையை செய்ய விடுங்கள். அதற்காக அவர் பணமும் வாங்குகிறார்.

இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்து பேட்டில் பட்டிருந்தால் கூட அது புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் அது அவுட்டும் இல்லை, நடுவரும் உறுதியற்றவராக இருந்தார். ஆனால் திடீரென இஷான் ஆடுகளத்தை விட்டு வெளியேறியது குழப்பமானது" என்று கூறினார்.

Read Entire Article