
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திரிதியை, அட்சய திரிதியை என்று போற்றப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத அல்லது தேயாத என்று பொருள். அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, அட்சய திருதியை இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. அதனால்தான் இந்த நாளில் மதிப்புமிக்க தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால், தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து விண்ணை தொட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் சாமானிய மக்களால் தங்கத்தை நினைத்துப் பார்க்கவே முடியாத நிலை உள்ளது.
எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் வேத நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் பிரதானமாக வெள்ளை நிறப் பொருட்கள் வாங்கினால் நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு மஞ்சள் நிற பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை வைத்து வெள்ளை நிறத்திற்கு பிளாட்டினம் வாங்கலாம், மஞ்சள் நிறத்திற்கு தங்கத்தை வாங்குங்கள் என்கிறார்கள். இதெல்லாம் ஆன்மீக ரீதியாக சரியானதல்ல. ஏற்புடையதும் அல்ல.
தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பல நூல்கள் வெள்ளியை மிகவும் உயர்வாக குறிப்பிடுகின்றன. அதற்குப் பிறகு தான் தங்கத்தையே கொண்டு வருகிறது. அதனால் வெள்ளியும் வாங்கலாம். தங்கம் வாங்கினால்தான் நல்லது என்று கூறுவது தவறு.
எனவே, வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி தங்கம் வாங்கவேண்டும் என்பதில்லை. கூடுமானவரை தங்கம் வாங்குவதை தவிர்க்கலாம். தங்கம் வாங்க வசதியில்லாதவர்கள், வெள்ளி வாங்கலாம், வீட்டிற்கு மிகவும் உபயோகமான வேறு பொருட்களை வாங்கலாம்.
அட்சய திருதியை நாளில் கண்டிப்பாக உப்பு வாங்கி வைப்பது சிறப்பு. அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம். சித்திரை மாத மளிகை பொருட்களை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாம்.
ஏனெனில் குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றான். குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாளும் இதுவே. பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான். மணிமேகலையும் இப்பாத்திரம் பெற்றுள்ளாள். பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிட மிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான். கௌரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும்போது, "அட்சய' என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான். கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே. இதனை தானத் திருவிழா என்றும் கூறுவர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக அட்சய திரிதியை நாள் தானம் செய்வதற்கு உகந்த நாளாகும். அட்சய திரிதியையில் செய்யும் எல்லா வகை தான தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும். கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும் என்பது நம்பிக்கை. ஆனால் இந்த நாளில் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.
இந்த ஆண்டு 30.4.2025 அன்று அட்சய திருதியை நன்னாள் ஆகும். அட்சய திரிதியை திதியானது முந்தைய நாளான 29.4.2025 அன்று இரவு 8:49 தொடங்கி மறுநாள் 30.4.2025 இரவு 8:41 மணிக்கு முடிவடையும்.