
புதுடெல்லி,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம்மில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது.
அதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. சிந்து நதிநீர் பின்னணியில் ஒரு வரலாறே உள்ளது. அதாவது, சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் இந்தியா - பாகிஸ்தான் இடையே 1960-ம் ஆண்டு கையெழுத்தானது. உலக வங்கியின் முழு முயற்சியால் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு, 1965, 1971, 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போருக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தை இந்தியா கைவிடும் என்று கூறப்பட்டது. தொடர்ந்து, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள ஊரி பகுதியில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று அப்போது இந்திய தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன.
ஆனாலும், 65 ஆண்டு காலமாக எந்தவித சிக்கலும் இல்லாமல் சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால், இப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்தியா தண்ணீரையே ஆயுதமாக கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், 65 ஆண்டு கால சிந்து நதிநீர் ஒப்பந்தம் இப்போது கைவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில், உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம்தான் 22.7 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. 37.4 சதவீத பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. சிந்து நதிதான் நாட்டின் 90 சதவீத உணவு பயிர்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. அதன் மூலமே 2022-ம் ஆண்டு அரிசி, கோதுமை, பருத்தி ஆகியவற்றை உற்பத்தி செய்து 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. எனவே, இதன் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கு செல்லாமல் தடுக்கப்படும் சிந்து நதி நீரை தேக்கிவைக்க வேண்டும் என்றால், இந்திய அணைகளின் கொள்ளளவை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. அதுவரைக்கும் ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்றாலும், சிந்து, சீலம், செனாப் நதிகளில் இருந்து வெள்ள காலத்தின்போது இந்தியாவுக்குள்ளேயே தண்ணீரை திருப்பிவிட முடியாத நிலை உள்ளது.
மேலும், இந்தியாவின் இந்த நடவடிக்கையால், ஏற்கனவே நதிநீர் பகிர்வு செய்துகொண்டுள்ள வங்காளதேசம், நேபாளம் ஆகிய அண்டை நாடுகள் அதிர்ச்சி அடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேபோல், திபெத்தில் உற்பத்தியாகும் சிந்து, சட்லெஜ் நதிகள் இந்தியா வழியாக பாய்கிறது. இந்த நதி நீரை பங்கீடு செய்வது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. அந்த வகையில், சீனாவும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பும் இருக்கிறது.