திருப்பூர்: திருப்பூரில், ஊத்துக்குளி சாலையில் உள்ள மூலிக்குளம் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திருப்பூர் நகரத்தின் மையப் பகுதியான அணைக்காடு பகுதியில் இருந்து தொடங்கும் இந்த வாய்க்கால் சுமார் 2.5 கிலோ மீட்டர் பாளையக்காடு, கருமாரபாளையம் மற்றும் மண்ணறை வழியாக மூலிக்குளம் வந்து சேர்கிறது. நகரத்தின் பகுதிகளின் வழியாக வருவதால் பல இடங்களில் புதர் மண்டியும், சாக்கடைகளால் சேறும் சகதியுமாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தன்னார்வ அமைப்புகளின் சார்பில் வாய்க்கால் தூர்வாரப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக குளம் நிறைந்து அப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் செரிவூட்டுவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் தற்போது குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து நொய்யல் ஆற்று தண்ணீர் வருவதற்கு இடையூறாக அமைந்துள்ளது. எனவே மூலிக்குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நீரை உறிஞ்சும் வகையில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்தி பயனுள்ள வகையில் கால்நடைகளுக்கு தீவனமாகவும் இயற்கை உரமாகவும் மாற்றி பயன்படுத்தவும் வலியுறுத்துகின்றனர்.
The post மூலிக்குளத்தில் படர்ந்த ஆகாயத்தாமரைகள் appeared first on Dinakaran.