கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு 900 காளைகள், 460 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

4 hours ago 2

அலங்காநல்லூர்: தைப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜன.14ம் தேதி பொங்கலன்றும், மறுநாள் (ஜன.15) பாலமேட்டிலும், ஜன.16ம் தேதி அலங்காநல்லூரிலும் உலகப் புகழ் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, அலங்காநல்லூர் அருகே, கீழக்கரை கிராமத்தில் உள்ள கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில், இன்றும் நாளையும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதன்படி இன்று காலை 7 மணி அளவில் முதல் நாள் ஜல்லிக்கட்டை அமைச்சர் பி.மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், பங்கேற்க 900 காளைகள், 460 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். கலைஞர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

பின்னர் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து திமிலை உயர்த்தி ஆக்ரோஷமாக வெளியேறிய காளைகளை, மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். ஒரு சில காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் மைதானத்தில் நின்று விளையாடின. வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடி கொடுக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தன. ஜல்லிக்கட்டை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

பரிசில்லாத ஜல்லிக்கட்டு;
புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன், இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலாவதாக ேகாயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் களத்தில் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து நின்று விளையாடியது. இந்த ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு 900 காளைகள், 460 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article