மகாகும்ப் நகர்: மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ள மத்திய மருத்துவமனையில் 12 குழந்தைகள் பிறந்துள்ளன என மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார். உபி மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கும்பமேளாவையொட்டி மகா கும்ப் நகர் என்ற தற்காலிக நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவுக்காக வரும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு சுகாதார வசதிக்காக மத்திய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் 12 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மனோஜ் கவுசிக் கூறினார். 12வது குழந்தை நேற்று முன்தினம் இரவு பிறந்தது. கல்பவாசியில் தங்கியுள்ள நேகாசிங் என்பவருக்கு குழந்தை பிறந்தது. சுகப்பிரசவத்தில் தான் அனைத்து குழந்தைகளும் பிறந்துள்ளன என்று அவர் கூறினார். கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி கவுசாம்பியை சேர்ந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு கும்ப் என பெயரிடப்பட்டது. கடந்த 3ம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வசந்த், வசந்தி என பெயரிடப்பட்டது. மகா கும்ப் நகரில் பிறந்த குழந்தைகளுக்கு மத நம்பிக்கையின் அடிப்படையில் போலேநாத், பஜ்ரங்கி, நந்தி, யமுனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
7 ஆயிரம் பெண்கள் துறவறம்;
பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவை காணவும் புனித நீராடவும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். கும்பமேளாவின் போது பல பெண்கள் துறவறம் பூண்டுள்ளனர். இதுகுறித்து உபி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கும்பமேளாவில் 7 ஆயிரம் பெண்கள் துறவறம் மேற்கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் உயர் கல்வி படித்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
மபியிலும் போக்குவரத்து நெரிசல்;
கும்பமேளா நடைபெற்று வரும் பிரயாக்ராஜ் நகரில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் அங்கு 2 நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பிரயாக்ராஜுக்கு வரும் அனைத்து நெடுஞ்சாலைகளில் குறிப்பாக லக்னோ, வாரணாசி, கான்பூரில் இருந்து வரும் சாலைகளில் சுமார் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மபியில் உள்ள ஜபல்பூர், சியோனி, கட்னி, மைஹார், ரேவா உள்ளிட்ட மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மபி முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில்,‘‘கும்பமேளாவுக்கு செல்லும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மபி மாநிலத்தின் வழியாக செல்கின்றனர். இதனால் பல மாவட்டங்களில் குறிப்பாக ரேவா பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே,ஒன்றிரண்டு நாட்களுக்கு கும்பமேளாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என கேட்டு கொண்டுள்ளார்.
The post ‘கும்பமேளா’ மருத்துவமனையில் 12 குழந்தைகள் பிறந்தன: 7 ஆயிரம் பெண்கள் துறவறம் appeared first on Dinakaran.