மூலப்பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பால் தொழில் முடக்கம் : பாத்திர உற்பத்தியாளர்கள் பரிதவிப்பு

3 weeks ago 5

Raw Materialsதிருப்பூர் : மூலப்பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாத்திர உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டு தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் வடக்கு பகுதியில் பாத்திர உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை பிரதானமானதாக இருந்து வருகிறது. அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், தண்ணீர்பந்தல், அம்மாபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் 300க்கும் அதிகமான பாத்திர தாயாரிப்பு பட்டறைகள் இருக்கின்றன.

இங்கு சில்வர், பித்தளை, காப்பர் ஆகியவற்றின் மூலம் பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அண்டா, பானை, செம்பு, அரிக்கன் சட்டி, பொங்கல் பானை உள்ளிட்டவை இங்கு உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாரம் சராசரியாக ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று வந்ததாக கூறும் பாத்திர உற்பத்தியாளர்கள், 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பாத்திர தொழில் பாதிப்பை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் அதிகரிப்பு, மறைந்து வரும் தீபாவளி சீர்வரிசை முறை, மூலப்பொருட்கள் விலையேற்றம், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பாத்திர உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டு வருகின்றது.

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்களை பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி சென்று இரு சக்கர வாகணங்களிலும், ஆட்டோக்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தனர். ஆனால், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு சிறு வியாபாரிகள் ஜிஎஸ்டி நடைமுறைகளை பின்பற்ற இயலாததால் தங்கள் தொழிலை கைவிட்டனர். மேலும் வெளி மாநில வியாபாரிகளின் வருகையும் வெகுவாக குறைந்தது. தற்போது பாத்திர உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்களுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

அதேபோல், உற்பத்தி செய்யப்பட்ட பாத்திரங்களுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டதாக பாத்திர உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பாத்திர உற்பத்தியாளர் ராஜேந்திரன் கூறியதாவது: கடந்த சில வருடங்களுக்கு முன் தீபாவளி பண்டிகைக்கு சீர்வரிசை கொடுக்க பாத்திரங்கள் வாங்கப்பட்டன. அதன்பின், தீபாவளி பலகார சீட்டு நடத்தியவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாத்திரங்களை பரிசாக கொடுத்தனர்.

காலப்போக்கில் இவை இரண்டும் குறைந்ததால் தீபாவளிக்கான வியாபாரம் முற்றிலும் களையிழந்து போனது. தற்போது வருடம் முழுவதும் உற்பத்தி செய்தாலும் பொங்கல் பண்டிகை மட்டுமே பாத்திர உற்பத்தியாளர்களுக்கு கை கொடுத்து வருகிறது. மூலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு, உற்பத்தி செய்யப்பட்ட பாத்திரங்களுக்கு வரி விதிப்பு ஆகியவை விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது. எனவே, வரி விகிதத்தை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மறைந்து போன ஈயம் பூசும் தொழில்

பித்தளை பாத்திரங்களை பயன்படுத்தும்போது ஈயம் பூசாமல் பயன்படுத்த முடியாது. பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அடிக்கடி ஈயம் பூச வேண்டியதிருக்கும். இதனால், பல்வேறு முக்கிய பகுதிகளில் இதற்கான கடைகளும், வீடுகளுக்கே வந்து ஈயம் பூசும் தொழிலாளர்களும் இருந்தனர். ஆனால் பித்தளை பாத்திரங்களின் பயன்பாடு குறைந்ததால் ஈயம் பூசும் தொழில் இல்லாமல் போனது.

The post மூலப்பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பால் தொழில் முடக்கம் : பாத்திர உற்பத்தியாளர்கள் பரிதவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article