திராவிட மாடல் ஆட்சியில் தோல் பொருள்கள் ஏற்றுமதியில் 47%.. தமிழ்நாடு இந்திய அளவில் மாபெரும் சாதனை!!

3 hours ago 1

சென்னை : நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களால் நேற்று (31.1.2025) 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை முன்வைக்கப்பட்டது. அது காலணிகள் உற்பத்தி தொழில் வளர்ச்சி, இல்லம் தேடிக் கல்வித் திட்டம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள சிறப்பான முயற்சிகளை வெளிப்படுத்தியுள்ளது. பாரம்பரிய தோல் பொருட்கள் தயாரிப்புத் துறையில் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்துவரும் சூழலில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும் தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறது. தமிழ்நாடு இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில் 38% பங்களிப்பும் இந்தியாவின் மொத்த தோல் பொருள்கள் ஏற்றுமதியில் 47% பங்களிப்பையும் தமிழ்நாடு வழங்கியுள்ளது. தோல் பொருட்கள் உற்பத்தித் துறையில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு சமீபத்திய ஆண்டுகளில் முதலீடுகள் செய்வதற்காக பெரிய காலணி உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்கும், கிராமப்புறங்களில் தொழிற்பேட்டைகளை உருவாக்கவும் எடுத்துள்ள முயற்சிகளை இந்த ஆய்வு எடுத்துக்காட்டியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான வேலை வாய்ப்பை வளர்த்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இத்தகைய முயற்சிகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதையும், குறிப்பாக சர்வதேச அளவில் புகழ்வாய்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான நைக் நிறுவனம் தைவான் நாட்டு ஃபெங் தே நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் தோல் பொருள்கள் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் செய்துகொள்ள மேற்கொண்டுள்ள முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காலணி உற்பத்தி நிறுவனங்களை அமைப்பதற்குத் தேவைப்படும் இடங்களை அடையாளம் கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வழிகாட்டி நிறுவனமான ”Guidance Tamil Nadu” ஒருங்கிணைந்த நடவடிக்கைககள் மூலம் தைவான் நிறுவனங்களுடன் இணைந்து காலணி தயாரிப்புத் துறையில் முக்கிய முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தங்களை வலுப்படுத்தி வருகிறது. ”Guidance Tamil Nadu”, நைக் நிறுவனத்தின் முக்கிய ஒப்பந்த உற்பத்தியாளர்களான போ சென், ஹாங் ஃபூ, டேக்வாங் மற்றும் சாங்ஷின் போன்றவர்களுடன் உறவுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த முயற்சிகள் தமிழ்நாட்டை முதலீட்டாளர்களின் முகவரியாக அடையாளப்படுத்தி வருவதையும் இந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் ஊக்கத் தொகை முறை, மூலதன மானியங்கள், ஊதிய மானியங்கள் மற்றும் நில விலை மானியங்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசு சிறப்பாக வழங்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, 2022-ல் காலணி மற்றும் தோல் பொருட்களுக்கென்று தனியே ஒரு கொள்கையை உருவாக்கியுள்ளது. இது பெரிய உற்பத்தியாளர்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் ஒரு விரிவான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதையும் ஆய்வறிக்கை பாராட்டியுள்ளது.

இல்லம் தேடிக் கல்வித் திட்டம்:

தமிழ்நாட்டின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை ஒரு புதுமையான முயற்சியாக ஆய்வறிக்கை விவரித்து உள்ளது. கொரோனா-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட கல்வி இடைவெளியைக் குறைப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது.மாநில திட்டக்குழு 2022 செப்டம்பரில் அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், சேலம், திருவாரூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய 362 பள்ளிகளில் தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் ஒரு விரிவான ஆய்வின் மூலம் திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்ததில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கற்றல் அனுபவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் கல்வி முறை மாணவர்களின் சுவாரசியமான செயலாக மாறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கூடுதலாக, ஆசிரியர்கள் விளையாட்டு அடிப்படையிலான அணுகுமுறை மூலம் குழந்தைகளின் கற்றல் ஆர்வம் அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதன் விளைவாக, மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வகுப்பறைகளில் பங்கேற்பதாகவும், மாணவர்கள் கணிதம் மற்றும் மொழித் திறன்களில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்றும் பொருளாதார ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சிதரத்தக்க செய்தியாகும்.

மொத்தத்தில் ஒன்றிய அரசின் பொருளாதார மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி ஆகியவை குறித்துக் கூறியுள்ள விவரங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசின் நிர்வாக மேன்மையில் இந்திய அளவில் தமிழ்நாடு அரசு படைத்து வரும் சாதனைகளை வெளிப்படுத்தியுள்ளது.

The post திராவிட மாடல் ஆட்சியில் தோல் பொருள்கள் ஏற்றுமதியில் 47%.. தமிழ்நாடு இந்திய அளவில் மாபெரும் சாதனை!! appeared first on Dinakaran.

Read Entire Article