
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் 2019-ம் ஆண்டு வெளியான 'கிஸ்' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை அளித்தது. இதையடுத்து அவருக்கு கன்னடத்தில் வாய்ப்புகள் குவிந்தன. 2021-ம் ஆண்டு 'பெல்லி சான்டட்' என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார் ஸ்ரீலீலா. தற்போது பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் நடித்த பகவந்த் கேசரி, குண்டூர் காரம் ஆகிய படங்கள் வெற்றிபெற்றன. குண்டூர் காரம் படத்தில் 'குர்ச்சி மாடதபெட்டி' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா தி ரூல்' படத்தில் 'கிஸ்சிக்' பாடலில் நடனமாடி கவனத்தை பெற்றார்.தெலுங்கில் நிதினுக்கு ஜோடியாக ராபின்ஹுட் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது, தமிழில் சிவகார்த்திகேயனுடன் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார்.இதற்கிடையே, 2022 -ல் இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிர்வார். எம்.பி.பி.எஸ் படித்து முடித்த ஸ்ரீலீலா, நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் பயின்றவர். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் நடிகையானவர்.
இந்த நிலையில், மூன்றாவதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளதை ஸ்ரீலீலா அறிவித்துள்ளார். "இதயத்தின் மீதான படையெடுப்புக்கு வீட்டிற்குள் மற்றொருவர்..." என அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஸ்ரீலீலாவின் இச்செயலுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் பாராட்டியும் வருகின்றனர்.