
மக்களின் அன்றாட போக்குவரத்தில் ரெயில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுமட்டுமல்லாமல் சரக்கு போக்குவரத்திலும் ரெயில்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. நீண்டதூரம் செல்பவர்கள் வசதியான பயணத்துக்கு ரெயில்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதற்கு தூங்கும் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை ரெயில்களில் இருப்பதே முதன்மையான காரணமாகும். அதிலும், மூத்த குடிமக்களுக்கு ஏறி, இறங்குவதற்கு ரெயில் பயணம்தான் சவுகரியமாக இருக்கிறது. பெருநகரங்களிலும் மக்களின் போக்குவரத்தில் மின்சார ரெயில்கள் வாழ்வாதாரமாக திகழ்கின்றன.
இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள காஷ்மீரில் இருந்து தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரிக்கு சரக்குகளை கொண்டு வருவதற்கு ரெயில்கள் முக்கிய கருவியாக இருக்கின்றன. ரெயில் போக்குவரத்தை எடுத்துக்கொண்டால் சரக்கு ரெயில்கள்தான் அதிக வருவாயை ஈட்டித்தருகின்றன. சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கேள்விக்கு பதில் அளிக்கையில், ரெயில்வே பற்றி மிக விரிவான பதிலை வழங்கியுள்ளார். "இப்போது 98 சதவீத ரெயில்கள் மின்சாரத்தின் மூலமே இயக்கப்படுவதால் டீசலுக்கான தேவை அதிகம் இல்லை.
கடந்த 2023-24-ல் இந்தியன் ரெயில்வே ரூ.2.56 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நிகரலாபம் ரூ.3,260 கோடியாகும். பெரும்பாலான செலவுகள் ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் எரிபொருளுக்கே சென்று விடுகிறது. ரெயில்களில் பயணிகளின் டிக்கெட்டுக்கு மட்டுமே ரூ.56,993 கோடி மானியமாக சென்று விடுகிறது. ரூ.100-க்கான பயணிகள் சேவையில் டிக்கெட் கட்டணமாக ரூ.54 மட்டுமே பெறப்படுகிறது. அதாவது பயணிகளுக்கான கட்டணத்தில் 45 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.
"இதுதவிர பல கட்டண சலுகைகள் மாற்றுத்திறனாளிகள், பல்வேறு வகையான நோயாளிகள், மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிலில், ரெயில்வே ஊழியர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்படும் கட்டண சலுகை அல்லது இலவச பாஸ்கள் பற்றி அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அவர்களுக்கெல்லாம் சலுகை வழங்கும்போது எங்களுக்கு இலவச பயணம் வேண்டாம், கொரோனாவுக்கு முன்பு கொடுத்த சலுகைகளையாவது வழங்கலாமே என்று மூத்தகுடிமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
கொரோனாவுக்கு முன்பு 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ரெயில் டிக்கெட்டில் 40 சதவீத சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீத சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதி முதல் இந்த சலுகை நிறுத்தப்பட்டு விட்டது. அதில் இருந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதிவரை ஆண், பெண் மூத்த குடிமக்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என 31.35 கோடி பேர் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு கட்டண சலுகை கொடுக்காததால் ரெயில்வேக்கு இந்த 5 ஆண்டுகளிலும் சேர்த்து ரூ.8,913 கோடிதான் மிச்சமாகியிருக்கிறது. மூத்த குடிமக்கள் தங்களின் 60 வயது வரை அரசாங்கத்துக்கு பல வரிகளை கொடுத்து வருவாயை தந்து இருக்கிறார்கள். அவ்வளவு நாளும் உழைத்து, உழைத்து அரசாங்கத்துக்கு பல்வேறு வரிகளை கட்டிய அவர்களின் முதிர் வயதில் தினமும் பயணம் செய்யப்போவதும் இல்லை. அவர்களால் அது முடியவும் செய்யாது. இதுமட்டுமல்லாமல் அவர்கள் தேசிய வளர்ச்சிக்கு அரும் பங்கை நல்கியவர்கள். அவர்களுக்கு நன்றி கடன் செலுத்தவேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமை ஆகும். எனவே கருணை அடிப்படையில் 60 வயதை தாண்டியவர்களுக்கு ரெயிலில் கட்டண சலுகை அளிக்க வேண்டும்.