மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

2 months ago 13

புதுடெல்லி,

நாட்டின் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடான ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சை பெற முடியும். இந்த திட்டத்தை மத்திய அரசு படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது.

இதில் தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. ஏழை, நடுத்தர, உயர் நடுத்தர அல்லது பணக்காரர் என எந்தவித பாகுபாடும் இன்றி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியும்.

ஆதார் அட்டை அடிப்படையில் 70 வயதை பூர்த்தி செய்தவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். அவர்களுக்கு ஆயுஷ்மான் அட்டை வழங்கப்படும். இது ஒரு செல்போன் செயலி அடிப்படையிலான திட்டம் ஆகும். எனவே பி.எம்.ஜே.ஏ.ஒய் தளம் அல்லது ஆயுஷ்மான் பாரத் செயலி மூலம் பயனாளர்கள் பதிவு செய்யலாம்.

பயனாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறலாம். கடந்த செப்டம்பர் 1-ந்தேதி வரை இந்த திட்டத்தில் 29,648 ஆஸ்பத்திரிகள் இணைந்துள்ளன. இதில் 12,696 தனியார் ஆஸ்பத்திரிகளும் அடங்கும். ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்திருக்கும் பயனாளர்களும் இந்த திட்டத்தில் இணையலாம். இதைப்போல தனியார் காப்பீடு திட்டம் மற்றும் தொழிலாளர் காப்பீடு திட்டம் போன்ற திட்டங்களில் இணைந்திருப்போரும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும்.

அதேநேரம் பிற பொது காப்பீடு திட்டங்களான மத்திய அரசு காப்பீடு திட்டம், முன்னாள் ராணுவ வீரர் பங்களிப்பு காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் மத்திய ஆயுத போலீஸ் படை திட்ட பயனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. இந்தநிலையில், மூத்த குடிமக்களுக்கான காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 4.5 கோடி குடும்பங்களை சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டம் டெல்லி, ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களை தவிர மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Read Entire Article