மூணாறு மாட்டுப்பட்டி அணையில் கடல் விமான சுற்றுலா திட்டத்திற்கு எதிர்ப்பு

10 hours ago 1


மூணாறு: மூணாறில் உள்ள மாட்டுப்பட்டி அணையில் கடல் விமான சுற்றுலா திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ள மாட்டுப்பட்டி அணை முக்கிய சுற்றுலாப் பகுதியாக உள்ளது. அங்குள்ள அரசு சார்பிலான மாட்டுப்பண்ணையில் உள்ள பசுக்களின் தீவனத்திற்கு அணையின் கரையோரம் 600 ஹெக்டேரில் புல் வளர்க்கப்படுகிறது. இதனால் இப்பகுதி ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் என்பதால் காட்டுயானைகள் தீவனத்திற்காக இங்கு நாள் கணக்கில் முகாமிடுவது வழக்கம். இதனிடையே கொச்சி – மூணாறு (மாட்டுப்பட்டி அணை) இடையே கடல் விமான சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தொடுபுழாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயசந்திரன், ‘‘மாட்டுப்பட்டி அணை பகுதி, காட்டுயானைகள் உள்பட வனவிலங்குகள் வசிப்பிடமாக உள்ளது. இதனால், இங்கு கடல் விமான சேவை நடத்தக்கூடாது. கடல் விமானம் சேவையால் இப்பகுதியில் உள்ள சூழல் பாதிக்கப்படும். இந்தத் திட்டத்தை நிறுத்தவேண்டும்’’ என வன உயிரின தலைமை பாதுகாவலரிடம் மனு அளித்துள்ளார். மேலும் அவர், ‘‘இந்தத் திட்டம், தேசியப் பூங்கா, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களை பாதுகாக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டினிடம் கேட்டபோது, ‘‘கடல் விமானம் இயக்குவதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் சட்டரீதியாக எதிர்கொள்ளப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை சாதாரண மக்களும் பயனடையும் வகையில் செயல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது’’ என்றார்.

The post மூணாறு மாட்டுப்பட்டி அணையில் கடல் விமான சுற்றுலா திட்டத்திற்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article