முல்லைப்பெரியாறு, மேகதாது பிரச்சினை குறித்து இன்றைய கூட்டத்தில் முதல்-அமைச்சர் பேச வேண்டும் - அண்ணாமலை

7 hours ago 1

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இதனிடையே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று காலை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக தமிழகம் முழுக்க பா.ஜ.க. சார்பில் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் ஒரு நாடகம். முல்லைப்பெரியாறு, மேகதாது பிரச்சினை குறித்து இன்றைய கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேச வேண்டும். தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகிறார்கள்; பல்வேறு மாநிலங்களால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் முதல்-அமைச்சர் கோட்டைவிட்டுள்ளார்" என்று கூறினார்.

முன்னதாக இதுகுறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருந்ததாவது:-

திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் தாழ்ந்திருக்கிறது. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை. பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை.

ஆனால், இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தினந்தோறும் விளம்பர சூட்டிங் நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தி கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து, இன்று ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார்.

கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்துவிடச் சொல்ல, முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு வாய் வரவில்லை. மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாருக்கு தான் வாழிய பாடி வரவேற்கிறது திமுக.

முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. தென்காசி மக்களுக்குப் பயன்படும் செண்பகவல்லி அணையிலும் தொடர்ந்து பிரச்சினை மட்டுமே செய்து வருகிறது கேரள மாநிலம்.

இதுதவிர தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 5 முறை கேரளாவிற்கு சென்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் சாதித்தது என்ன? அரிசி, பருப்பு, காய்கறிகள் என அனைத்தையும் பெற்றுவிட்டு, பதிலுக்கு கேரள மாநிலம் நமக்கு திருப்பி தருவது மருத்துவ கழிவுகளும், இறைச்சி கழிவுகளும்தான்.

கேரள அரசு இரண்டு நாட்களுக்கு முன்பாக அங்குள்ள தெருநாய்களை கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டு வந்து விட்டு சென்றார்கள். இவை அனைத்தும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு தெரியாமலா நடக்கிறது. இப்படி தமிழகத்தை ஒரு குப்பை கிடங்காக பார்க்கும் கேரள முதல்-மந்திரிக்கு தான் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின்.

தொடர்ந்து தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் எதிராக செயல்படுவர்களை வைத்து தனது அரசியல் இருப்பை காட்டிக்கொள்ள காட்டிக்கொள்ள துடிக்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. தனது இந்தி கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலினை கண்டித்து, இன்று தமிழக பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

பாஜகவினர் தங்களது வீட்டு முன்பாக நின்று, தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலினை கண்டித்து, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read Entire Article