
ஐதராபாத்,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலை 'பயங்கரவாதம்' என்று வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கூறுவதில்லை? என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
"பஹல்காம் தாக்குதலை நடத்தியவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிடாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் கிளர்ச்சியாளர்கள், துப்பாக்கி ஏந்தியவர்கள் என்பது போன்ற வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்த முடியும்?
அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து முஸ்லிம்கள் அல்லாதவர்களை மட்டும் சுட்டுக் கொன்றார்கள். மதத்தின் பெயரால் அவர்கள் கொலை செய்கிறார்கள், அவர்கள் பயங்கரவாதிகள்தான். மேற்கத்திய ஊடகங்கள் தங்கள் நாட்டில் ஏதாவது நடந்தால், அதை பயங்கரவாத தாக்குதல் என்று அழைக்கிறார்கள், அப்படியானால் பஹல்காம் தாக்குதலை 'பயங்கரவாதம்' என்று ஏன் அவர்கள் கூறுவதில்லை?"
இவ்வாறு ஓவைசி தெரிவித்தார்.