
வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிற நடவடிக்கையை நாம் வரவேற்கிறோம்; ஆதரிக்கிறோம். இந்த ராணுவ நடவடிக்கையை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று மாலை 5 மணிக்கு பேரணி ஒன்றை அறிவித்திருக்கிறார். இந்தப் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும். நானும் இந்த பேரணியில் பங்கேற்கிறேன்.
இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்கிற வகையில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரிக்க வேண்டும். அதே வேளையில் இது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போராக மாறிவிடக்கூடாது. போர் வேண்டாம் என்பதுதான் நம்முடைய வேண்டுகோள்.
இந்திய மக்களும் போரால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்கிற பெரும் கவலையோடு, மத்திய அரசுக்கும், இந்திய முப்படைக்கும் போர் வேண்டாம் என்கிற வேண்டுகோளை விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.