டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்த மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது.
குமுளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு மற்றும் கேரள அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்பர்.
கூட்டத்தில், அணையின் பராமரிப்பு பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு வைக்கும் கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. இக்குழுவினர் அணையையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள அரசு அனுமதிப்பதில்லை. இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவதுடன் சாலை அமைக்கவும் கேரள விடுவதில்லை, எனவே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அதிகாரிகளை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முல்லை பெரியாறு மேற்பார்வை குழு உடனடியாக கூடி சுமூக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டது.
4-வாரத்தில் தீர்வு காண முடியாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் நீதிபதிகளின் உத்தரவாக இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து முல்லை பெரியாறு மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ள குமுளியில் வரும் 22ஆம் தேதி நடக்கிறது.
The post முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்த மேற்பார்வை குழுவின் முதல் கூட்டம் மார்ச் 22ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.