மதுரை: பொருளாதார தோல்வியை மூடி மறைக்க நாட்டில் மத வெறியை தூண்டுகிறது பாஜ அரசு என மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்.2ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டிற்கான இணையதளம், இசை-ஒளிப்படம் வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் குறும்பட போட்டி அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று மதுரையில் நடந்தது. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் மாநாட்டிற்கான இணையதளத்தை துவக்கி வைத்தார். மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஏப்ரல் 6ல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செந்தொண்டர்கள் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரகாஷ் காரத் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். நாட்டை அச்சுறுத்திக் கொண்டுள்ள நவீன தாராளமயம், பாசிச கொள்கைகள், மோடி அரசை எப்படி வீழ்த்துவது, நவீன இந்துத்துவா கொள்கையை எப்படி வீழ்த்துவது, மதச்சார்பற்ற கோட்பாட்டின் அடிப்படையில் மக்களை அணி திரட்டுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஒரு கொடுங்கோல் ஆட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ள பாஜ அரசு நாட்டின் பொருளாதார கொள்கையில் மிகப்பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இதை மூடி மறைக்க நடுத்தர மற்றும் ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிய மோடி அரசு, நாட்டில் மதவெறி, மத பதற்றத்தை தூண்டிவிடுவது போன்றவற்றை செய்து வருகிறது.
திருப்பரங்குன்றத்தில் பிரச்னையே இல்லாத நிலையில், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மோதலை உருவாக்கும் திட்டமிட்ட வேலைகளை பாஜ கட்சியினர் செய்து வருகின்றனர். அவர்களின் முகத்தில் அறைந்ததை போல, அங்குள்ள மக்கள் ஒற்றுமையை தமிழகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆயுதத்தை எடுத்து மொழி திணிப்பு, மும்மொழி திட்டம், புதிய கல்வி கொள்கை, மாநில உரிமைகளை பறிப்பது, மத பதற்றத்தை உருவாக்குவது ஆகியவற்றை மோடி தலைமையிலான பாஜ அரசு செய்து வருகிறது. இரு மொழி கொள்கையிலேயே தமிழ்நாடு வளர்ந்துள்ள நிலையில், மும்மொழி கொள்கை அடிப்படையில் இந்தியை திணிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பொருளாதார தோல்வியை மூடி மறைக்க நாட்டில் மத வெறியை தூண்டுகிறது பாஜ அரசு: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.