
புதுடெல்லி,
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு, கேரள அரசு மற்றும் தனி நபர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று(மே.06) இன்று நடைபெற்றது. நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் நடந்த இந்த விசாரணையில் கேரளா அரசு தரப்பு, இந்த அணை பிரச்சினை பொருத்தவரைக்கும் தொடர்ச்சியாக நீண்டு கொண்டே செல்கிறது அதனால்தான் கேரளா இந்த விவகாரத்தில் முடிவுக்கு வர புதிய ஆணை ஒன்றே தீர்வு என்று கூறியது.
தொடர்ந்து தமிழக அரசு தரப்பில், கடந்த 19 ஆண்டுகளாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா கூறி வருகிறதே தவிர தற்போதைய அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காமல் இருக்கிறது. ஏற்கனவே தமிழகம் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடி உரிய உத்தரவை பெற்றுள்ளது இருப்பினும் அந்த உத்தரவுகளை செயல்படுத்த கேரளா முட்டுக்கட்டையாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அதே போல் தனி மனுதாரர்கள் தரப்பு "அரசியல் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்" என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.தொடர்ந்து மூன்று தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு ஏப்ரல் 25ம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரளா அரசு செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அத்துடன் அணை பராமரிப்பு, அதற்கான ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட மேற்பார்வை குழு பரிந்துரைகளை 2 வாரத்தில் செயல்படுத்த உத்தரவிட்டனர். அதேபோல், பரிந்துரைகளில் கூறியுள்ள ரியல் டைம் மழை அளவு பதிவு உள்ளிட்டவற்றை கேரளா, தமிழ்நாடு அரசுகள் செயல்படுத்தி விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினர்.
மேலும் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 1000 ஆண்டு கட்டுமானங்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவை இல்லை. பொதுவான குற்றச்சாட்டை முன்வைக்காதீர்கள். என்று கருத்து தெரிவித்து. வழக்கை வருகிற 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.