புளியங்குடி,ஏப்.11: வேகமாக வளர்ந்து வரும் புளியங்குடி நகர்ப்பகுதியில் கழிவுநீரை வெளியேற்ற முறையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் மற்றும் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அவதிப்படும் பொதுமக்கள், தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
புளியங்குடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகரமயமாதல் காரணமாக பெருகி வரும் மக்கள் தொகைக்குக்கேற்ப புளியங்குடி நகராட்சியில் கழிவு நீரை வெளியேற்ற முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் கழிவு நீரானது அருகில் உள்ள இலந்தை குளம், நாராயணப்பேரி, ஆவணி அம்மன் உள்பட பல்வேறு நீர்நிலைகளில் நேரடியாக கலக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் மற்றும் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. ஏற்படுகிறது. இதனால் அவதிப்படும் பொதுமக்கள், தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு நல இயக்க நிர்வாகிகளான போத்திலிங்கம் பாலசுப்ரமணியன், கணேசன் ஆகியோர் கூறுகையில் ‘‘புளியங்குடி வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது இலந்தை குளம், நாராயணப்பேரி குளங்களில் நேரடியாக கலக்கிறது. இந்த குளங்கள் கிராமங்களுக்கு நிலத்தடி நீராதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் உள்ளது. இதனை பாதுகாத்து பராமரிப்பதில் தொலை நோக்கு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தபடவில்லை. குளத்தின் கரையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பை கழிவுகளும் பாசன கால்வாயில் நேரடியாக கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே நீர் நிலைகளை பாதுகாக்க உள்ளாட்சி அமைப்புகள், நீர்வளத்துறை, வருவாய்த்துறை ஆகியவை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
The post முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாதால் புளியங்குடி நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பால் நோய் பரவும் அபாயம் தடுப்பு நடவடிக்கை எடுக்கப் படுமா? appeared first on Dinakaran.