முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

2 hours ago 2

தொண்டாமுத்தூர்,பிப்.6: கோவை அருகே மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முன்னதாக நேற்று காலை கோ பூஜையுடன் துவங்கி,நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முத்தங்கி சிறப்பு அலங்காரம் செய்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.முன் மண்டபத்தில் தொடர்ந்து சேவல் கொடிக்கும்,கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜை நடைப்பெற்றது. விழாவை தொடர்ந்து விநாயகர் மூசிக வாகனத்திலும்,தங்க கற்பக விற்சகத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி சுவாமி, வீரபாகு உள்ளிட்ட சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து திருவீதி உலா நடைப்பெற்றது. இதை தொடர்ந்து தினமும் வேள்வி பூஜை மற்றும் சுவாமி வாகனங்களில் திருவீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 10ம் தேதி காலை 7.30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதன் பின் சுப்பிரமணியசுவாமி வள்ளி,தெய்வானை சமேதமாக கண்ணாடி மஞ்சத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. 11ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 11 மணி அளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. நேற்றைய விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் உறுப்பினர்கள் மகேஷ் குமார்,பிரேம் குமார், சொக்கம்புதூர் கனகராஜ்,சுகன்யா ராஜரத்தினம் மற்றும் கோவில் துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காரமடை குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயில்: காரமடையை அடுத்துள்ள குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று யாகசாலை பூஜை வேள்வியில் முருகனின் வேல் வைக்கப்பட்டு கணபதி ஹோமம், வேத மந்திரங்கள் முழங்க மகா ஆரத்தி நடைபெற்றது.

தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,ராஜ அலங்கார பூஜைகளும் நடைபெற்றது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் வேல் கொடி மரத்திற்கு எடுத்து வரப்பட்டு கொடி மரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்பு,சேவல் மற்றும் வேல் உருவப்படம் பொறிக்கப்பட்ட கொடியானது கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. அதன் பின்பு வேத பாராயணம் ஓதப்பட்டது.அதனை தொடர்ந்து மகா தீபாராதனை,தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து தினமும் சிறப்பாக அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடைபெற உள்ளன. வரும் 9ம் தேதி இரவு அம்மன் அழைப்பு,10ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம்,மாலை யானை வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வரும் பிப்.11ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. அன்னூர் கல்யாண சுப்பிரமணியசாமி கோவில்: அன்னூர் அருகே உள்ள குமரன் குன்று பகுதியில் பழமை வாய்ந்த கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், நடைபாண்டுக்கான தைப்பூச தேர்த் திருவிழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று அதிகாலை கொடிமரத்தின் முன்பு சிறப்பு யாக வேள்விகள் நடத்தப்பட்டு முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.சேவல் கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க சேவல் கொடி கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் ஓட்டம் வருகின்ற 10ம் தேதி அம்மன் அழைப்பு நடத்தப்பட்டு 11ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் வைபவம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

The post முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article