மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்தால் நிதி தர மாட்டோம் என கூறுவது தவறு: பாமக தலைவர் அன்புமணி பேட்டி

3 hours ago 2

சேலம்: மும்மொழி கொள்கையினை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதி தரமாட்டோம் என ஒன்றிய அரசு கூறுவது தவறு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தில் தொகுதிகள் குறைக்கப்படுவதை ஏற்று கொள்ள முடியாது. இதுதொடர்பாக மார்ச் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்று தனது கருத்துக்களை தெரிவிக்கும். ஒன்றிய அரசின் கொள்கை மும்மொழி கொள்கை. தமிழக அரசின் கொள்கை இருமொழி கொள்கை. ஆனால் பாமக கொள்கை ஒரு மொழி கொள்கை தான்.

மொழியை பாதுகாக்க வேண்டியது தான் ஒன்றிய அரசின் கடமை. நான் கூட்டணிக்காக பேசவில்லை. மனதில் பட்டதை கூறுகிறேன். இதனை எப்படி வேண்டுமானாலும் நினைத்து கொள்ளுங்கள். ஒன்றிய அரசு, புதிய கல்வி கொள்கை ஏற்று கொண்டால்தான் கல்வித்துறைக்கு நிதி வழங்குவோம். இல்லையெனில் வழங்க மாட்டோம் என கூறுகிறது. மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றால் நிதி தரமாட்டோம் என கூறுவது தவறு.
கல்வி என்பது மாநில அரசின் உரிமை. 45 ஆண்டுக்கு முன் கல்வி மாநில பட்டியலில் இருந்தது. பிறகு எமர்ஜென்சி காலத்தில் பொதுப்பட்டியலுக்கு எடுத்து சென்று விட்டனர். நம்முடைய தாய்மொழி தமிழ் மொழி. அப்படிப்பட்ட மிக பழமையான மொழியை முன்னிலைப்படுத்த வேண்டும்.

உலகம் முழுவதும் தாய் மொழியை படித்துதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்றவர்கள் தாய் மொழியை படித்து தான் விருது பெற்றிருக்கிறார்கள். இதில் நமக்கு கர்வம் இருக்க வேண்டும். நம்முடைய தாய்மொழி அழிந்து வருகிறது. மற்ற மொழிகளை கற்றுக்கொள்வது தவறில்லை, ஆனால் திணிக்க கூடாது. இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது. கல்வியை கட்டணம் இல்லாமல் சுமையில்லாமல் தர வேண்டியது அரசின் கடமை. ஆனால் இங்கு கல்வி வியாபாரமாக உள்ளது. ஏன் இந்த நிலை ஏற்பட்டது. 1967ம் ஆண்டில் வெறும் 10 தனியார் பள்ளிக்கூடம் இருந்தது. இப்போது 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. தமிழ்மொழியை பயிற்று மொழியாக கொண்டு வர வேண்டும் என கூறி வருகிறோம். இது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்தால் நிதி தர மாட்டோம் என கூறுவது தவறு: பாமக தலைவர் அன்புமணி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article