பரமக்குடி: மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக மாணவிகளை பேச வைத்து வீடியோ வெளியிட்ட பாஜ பிரமுகர் மீது, மாணவியின் பெற்றோர் தரப்பில் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்மொழி கல்விக்கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்களுக்கு நிதி கிடையாது என ஒன்றிய அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இக்கொள்கைக்கு தமிழ்நாடு அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து பேசிய வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், ‘‘அரசு பள்ளி மாணவிகளாகிய எங்களுக்கு மும்மொழி கற்க உரிமை இல்லையா? ஏழை மாணவர்களாகிய எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க அனுமதி தாருங்கள்’’ என்று பேசி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த மூன்று மாணவிகளில் இருவரின் தந்தை பாஜவில் இருப்பதாகவும் நேற்று முன்தினம் காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பாக, காலை 7 மணி அளவில் மாணவிகளை பேச வைத்து வீடியோ எடுத்ததாகவும் கூறப்பட்டது. வீடியோவில் இருந்த ஒரு மாணவியின் தந்தை கூறுகையில், ‘‘நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த எனது மகளை பாஜவை சேர்ந்த விவிதீஸ்வரன் என்பவர் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பேச சொல்லி வாய் அசைக்க கூறியுள்ளார்.
பாஜ அரசு நேரடியாக மோத தைரியம் இல்லாமல் பள்ளிக் குழந்தைகளை வைத்து அரசியல் செய்கிறது. இந்த விவகாரத்தில் எனது மகளுக்கோ, எனக்கோ, பள்ளி ஆசிரியருக்கோ எந்த தொடர்புமில்லை. இந்த வீடியோவை எடுத்தவர் பாஜவில் தெளிச்சாத்தநல்லூர் கிளைச் செயலாளர் ஆக உள்ளார். பள்ளி வளாகத்தில் வீடியோ எடுத்த விவிதீஸ்வரன் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இது தொடர்பாக நான் போலீசில் புகார் அளிப்பேன்’’ என்றார். இதனிடையே, பாஜவை சேர்ந்தவர்களின் மகள்கள் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பேசிய வீடியோவிற்கும், எங்களது பள்ளி ஆசிரியர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மற்றொரு வீடியோவையும் நேற்று வெளியிட்டுள்ளனர்.
The post மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக மாணவிகளை பேச வைத்து வீடியோ வெளியீடு: பாஜ நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.