புதுடெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தேதி நவம்பர் 26ல் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி நடத்திய தாக்குதலில் 166 பொதுமக்கள் பலியாகினர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டும் போலீசாரால் உயிருடன் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தீவிரவாதி தஹவ்வூர் ராணா அமெரிக்காவில் கடந்த 2009ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மும்பை தாக்குதலுக்கான சதித்திட்டம் தீட்டியதில் ராணா முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
இதனால் இவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ராணாவை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கடைசி முயற்சியாக ராணா கடந்த நவம்பர் 13ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்ற அடுத்த நாளான கடந்த 21ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராணாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் குற்றவாளிக்கு எதிராக முகாந்திரம் இருப்பதால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த சம்மதம் தெரிவித்தது. இதனால் ராணா விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது.
* மும்பை தாக்குதலில் மூளையாக கருதப்படும் ராணாவுக்கு தற்போது 63வயதாகிறது.
* 2009ம் ஆண்டு சிகாகோவில் வைத்து ராணாவை எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
* தற்போது லாஸ்ஏஞ்சல்ஸ் சிறையில் ராணா அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
The post மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தடையில்லை: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.