
புதுடெல்லி,
நாட்டின் நிதி தலைநகராக கருதப்படும் மும்பை நகருக்குள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக ஊடுருவி நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 166 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
இதில் அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டார். மற்ற 9 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் விசாரணைக்கு பிறகு 2012-ம் ஆண்டு புனேயில் உள்ள எரவாடா சிறையில் தூக்கில் போடப்பட்டான்.
இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான பாகிஸ்தான் வம்சாவளியும், அமெரிக்க குடியுரிமை பெற்றவருமான டேவிட் கோல்மன் ஹெட்லி என்ற தாவூத் கிலானி அமெரிக்காவில் பிடிபட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்களில் மற்றொருவரும், பாகிஸ்தானை சேர்ந்த கனடா தொழில் அதிபருமான தஹாவூர் ராணா கடந்த 2009-ம் ஆண்டு இன்னொரு பயங்கரவாத வழக்கில் அமெரிக்காவில் பிடிபட்டார். அந்த வழக்கில் அவருக்கு அமெரிக்க கோர்ட்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மும்பை தாக்குதல் சம்பவத்தில் டேவிட் கோல்மன் ஹெட்லிக்கு உதவியதாகவும், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹர்கத்-உல்-ஜிகாதி-இஸ்லாமி இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டதும் தெரியவந்தது.
இவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன்பலனமாக ராணாவை நாடு கடத்தும் நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டி, அவர் சிறப்பு விமானத்தில் இந்தியா அழைத்து வரப்பட்டார்.
பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 18 நாள் என்.ஐ.ஏ. காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் 2-வது நாளாக நேற்றும் அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி மும்பை தாக்குதலில் அவரது துல்லியமான பங்கு குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
மேலும் அவருக்கும் மற்றொரு முக்கிய குற்றவாளி ஹெட்லிக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் அவர் சந்தித்த நபர்கள், குறிப்பாக துபாயில் அவர் சந்தித்த நபர் உள்ளிட்ட தொடர்புகள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்படும் என என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.