காலே,
இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 29ம் தேதி தொடங்கியது..இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 654 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கவாஜா 232 ரன்களும், ஸ்டீவ் சுமித் 141 ரன்களும், அறிமுக வீரர் ஜோஷ் இங்லிஸ் 102 ரன்களும் அடித்தனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெப்ரி வாண்டர்சே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. சண்டிமால் 9 ரன்களுடனும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், மேத்யூ குனேமேன் மற்றும் லயன் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 42 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் வெகு நேரமாகியும் மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சண்டிமால் 63 ரன்களுடனும், குசல் மெண்டிஸ் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது . சண்டிமால் 72 ரன்களும், குசல் மெண்டிஸ் 21 ரன்களும் எடுத்து வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 165 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் குனமன் 5 விக்கெட் , லியோன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த நிலையில் , 489 ரன்கள் பின்தங்கியதால் இலங்கை அணிக்கு ஆஸ்திரேலியா பாலோ ஆன் வழங்கியுள்ளது . இதனால் மீண்டும் 2வது இன்னிங்சில் இலங்கை அணி விளையாடி வருகிறது.