
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை அருகே முலுந்த் பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசார் வழக்கமான சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனை சாவடி அருகே இருந்த இரும்பு கம்பத்தின் மீது கார் ஒன்று வேகமாக மோதியது.
அந்த காரை ஓட்டி வந்த இளைஞர் உடனடியாக காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அவரிடம் காரை நிறுத்துமாறு போலீசார் கூறினர். ஆனால் அந்த நபர் அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றார்.
இதையடுத்து காரை ஓட்டிய வாலிபரை போலீசார் தங்கள் வாகனங்களில் துரத்திச் சென்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த துரத்தல் சம்பவத்தின்போது சுமார் 7 கார்கள் மீது அந்த வாலிபர் தனது காரை மோதி விபத்து ஏற்படுத்தினார். இதையடுத்து 11 கி.மீ. தாண்டி விக்ரோலி பகுதியில் அந்த காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் காரை ஓட்டிய நபரின் பெயர் கரன் மோஹிதே(வயது 26) என்பதும், அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இரும்பு கம்பத்தின் மீது மோதியபோது ஏற்பட்ட பயத்தால் போலீசார் நிறுத்த சொல்லியும் நிற்காமல் சென்றதாக கரன் மோஹிதே வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.