மும்பையின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுமா குஜராத்..? - இன்று மோதல்

3 hours ago 3

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகள் எடுத்து இருப்பதுடன், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 3-வது இடம் வகிக்கிறது.

முதலில் சற்று தடுமாறிய மும்பை அணி கடைசியாக 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி வீறுநடை போடுகிறது. அதேவேளையில் முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று மும்பையின் ஆதிக்கத்துக்கு குஜராத் முடிவு கட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

Read Entire Article