‘‘வழிநடத்தும் பொறுப்பு பறிக்கப்பட்டதும் கட்சி செயல்பாடுகளில் ஆர்வமில்லாமல் மீண்டும் முடங்கிக் கிடக்கிறாராமே தேசிய கட்சி பிரமுகர்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில், மாஜி தேசிய பிரமுகருக்கு தாமரைக்கட்சியில் பலமுறை சீட் வழங்கப்பட்டது. ஆனாலும், அடுத்தடுத்து தோல்விகளை தழுவியதாலும், மாவட்டத்தில் கட்சியை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்ல முடியாததாலும் இவரை தாமரை கட்சி தேசிய மேலிடம் ஒதுக்கியே வைத்திருந்தது.. இவரும் கட்சிப்பணிகளில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் கட்சியின் மாநில தலைமையானவர், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு சென்றார். இதனால் மாஜி தேசிய பிரமுகருக்கு மாநிலத்தில் கட்சியை வழி நடத்தும் குழுவின் தலைமை பொறுப்பு திடீரென வழங்கப்பட்டது. இதனால் உற்சாகமாக மாவட்டத்தில் வலம் வந்தார். ‘அடுத்த தலைமை நான்தான்… கட்சியை எப்படி கொண்டு போகப் போகிறேன் பாருங்க..’ என நெருங்கிய வட்டத்தில் கூறி வந்தாராம்.. தேசிய தலைமைக்கும் அவ்வப்போது தூது விட்டபடியே இருந்தாராம்.. ஆனால், மாநில தலைமையானவர் ரிட்டர்ன் ஆனதும், இவரது பொறுப்பு பறிக்கப்பட்டது. இதனால் பயங்கர அப்செட்டில் இருக்கிறாராம்.. பழையபடியே கட்சி செயல்பாடுகளில் ஆர்வமில்லாமல் முடங்கி விட்டாராம்.. ‘அட… கவலைப்படாதீங்க… வேற ஸ்டேட்ல பெரிய பதவிகள் தேடி வரும்…’ என இவரது கால கட்சி சீனியர்கள், ஆறுதல் கூறி வருகின்றனராம்.. ஆனால், நம்பிக்கையின்மையோடு வலம் வருகிறார் மாஜி தேசிய பிரமுகர்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனிக்காரர் அணி மாஜி ‘கப்சிப்’ என இருந்து வருகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாநகரில் உள்ள தேனிக்காரர் அணியை சேர்ந்த மாஜி அமைச்சர் சமீப காலமாகவே ‘கப்சிப்’ என இருந்து வருகிறாராம்.. இலை கட்சி குறித்தோ, சேலத்துக்காரருக்கு எதிராகவோ எதுவும் கருத்து தெரிவிப்பது இல்லையாம்… தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என அவர் இருந்து வருகிறராம்… இப்போது இருக்கும் சூழ்நிலையில் இலை கட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் யாருக்கு எதிராகவும் எதுவும் பேச வேண்டாம் என அவர் முடிவு எடுத்து இருக்காரு என அவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்குள் பேசிக்கிட்டாங்க.. இந்த விஷயத்தில் மாஜியானவரை, தேனிக்காரரும் பெரிதாக கண்டுகொள்வது இல்லை. மலைக்கோட்டை மாநகரில் தேனிக்காரர் அணி செயல்படாமல் இருந்து வருவதால் இலை கட்சிக்குள்ளே கமாண்ட் அடிக்கறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பிரபலங்களுடன் ரகசிய சந்திப்பை ஒன்றிய அதிகார கட்சியின் மாஜி நாயகன் தொடருகிறாராமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தை ஒட்டிய யூனியன் பகுதியில் ஒன்றிய அதிகார கட்சியில் மாஜி நாயகனாக உலா வந்தவர் நாதன்சாமி பெயர் கொண்டவர். பொதுத் தேர்தலுக்கு பின் தனது பதவியை பறிகொடுத்த நிலையில், அவ்வப்போது புதிய தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தாராம்.. ஆனால் ஒன்றிய கட்சித் தலைமையோ சைலண்ட் மோடில் இருந்து விட்டதாம்.. தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் மலர் சின்னத்தில் அடி சறுக்கவே குஷியான அந்த மாஜி, அடுத்தடுத்த நெருக்கடியை கட்சித் தலைமைக்கு கொடுத்து பார்த்தாராம்.. ஆனால் அனைத்தும் ஏமாற்றத்தில் முடியவே தற்போது யூனியனில் நிலவும் அரசியல் சூழலை தனக்கு சாதகமாக்கி தனி அணியை உருவாக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளாராம்..
ஏற்கனவே சுயேச்சை, அதிமுக மாஜி பிரதிநிதி ஒருவரையும் சந்தித்து ஆலோசித்துள்ள அவர், தற்போது மேலும் சில பிரபலங்களுடன் ரகசிய சந்திப்பில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளாராம்.. எப்படியாவது தனி அணியை களமிறக்கி ஒரு ‘கை’ பார்த்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் தேஜ அணியில் சலசலப்பு அதிகமாகி வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஜெயில் ஆபீசர் ஒருத்தர் முப்பது ஏக்கரில் திராட்சை தோட்டம் வாங்கியதை கண்டு விஜிலென்ஸ் அதிகாரிங்க திகைத்து போயிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரத்து மத்திய ஜெயிலில் நடந்த ஊழல் விவகாரம் சில உயர் அதிகாரிகளின் தூக்கத்தை கலைச்சிருக்காம்.. வாங்காத பொருட்களை வாங்கியதாக பில் எழுதி பல கோடிகள் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்காம்.. பல மாதங்களாக விஜிலென்ஸ் விசாரணை நடந்து வந்த நிலையில், சமீபத்தில் மூன்று உயரதிகாரிகள் மீது வழக்கு பாய்ஞ்சிருக்காம்.. ஆனால் அதற்கு முன்னதாகவே ரெண்டு ஆபீசர்ஸ் மருத்துவ விடுப்பு எடுத்துக்கிட்டு போயிட்டாங்களாம்.. அவர்களின் பாதுகாவலர், டிரைவர் ஆகியோருக்கு ஜெயிலுக்குள்ளே வேறு வேலையை ஒதுக்கிட்டு போயிட்டாங்களாம்.. இவர்களை விஜிலென்ஸ் எந்நேரத்திலும் சுற்றிவளைக்கும் எனவும் சொல்லப்படுது.. இதனால் உஷாராகவே அவர்கள் இடத்தை காலி செஞ்சிட்டு போனதாகவும் ஜெயில் ஆபீசர்ஸ் சொல்றாங்க.. இவர்கள் தூங்கா நகரத்தில் வாழ்ந்த வாழ்க்கையை யாரும் வாழவே முடியாதுன்னு சக ஆபீசர்ஸ் பெருமூச்சு விடுறாங்களாம்.. இதில் ஒருவர் முப்பது ஏக்கரில் திராட்சை தோட்டத்தை வாங்கியிருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்திருக்காம்.. இவர்களின் பின்னணி குறித்தும் விஜிலென்ஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்காங்களாம்.. இதில் உச்சக்கட்ட பரபரப்பு ஒன்றும் அடங்கியிருக்காம்.. என்னை காப்பாற்றவில்லை என்றால் யாருக்கெல்லாம் கொட்டிக்கொடுத்தேன் என்பதை புட்டுப்புட்டு வைப்பேன் என இன்னொரு அதிகாரி சொன்னதாக ஜெயில் டிபார்ட்மெண்டில் தகவல் கசிஞ்சிருக்கு.. அந்த பட்டியலில் மூன்று ஆபீசர்ஸ் இருப்பதாகவும் சொல்றாங்க.. அதே நேரத்தில் எப்ஐஆரில் சிக்கியுள்ள ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்காம்… இதையெல்லாம் பார்க்கும்போது ஒட்டுமொத்த ஜெயில் ஆபீசர்சும் அச்சத்துலயே இருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post முப்பது ஏக்கரில் திராட்சை தோட்டம் வாங்கிப் போட்ட ஜெயில் ஆபீசரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.