டிராலி பையில் அடைத்து கொண்டு வந்த
அபூர்வ வகை குரங்குகள் மீட்பு; 4 பேர் கைது
மீனம்பாக்கம்: தாய்லாந்து, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேற்று சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட அபூர்வ வகை குரங்குகள் மற்றும் ரூ.66 லட்சம் மதிப்பிலான தங்கம் போன்ற பொருட்களை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து, 3 பேரிடம் விசாரிக்கின்றனர். சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அபூர்வ குரங்குகள் மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்துக்கு நேற்று அதிகாலை தாய் ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், சந்தேக பயணிகளின் உடைமைகளைத் திறந்து பார்த்து சோதனையிட்டனர்.
அப்போது தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலாவாக சென்று வந்த சென்னை பயணிமீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனது மிகப்பெரிய வடிவிலான டிராலி பையில் சாக்லெட், பிஸ்கட் போன்ற பொருட்கள் மட்டுமே இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் பயணி தெரிவித்துள்ளார். எனினும், அவரிடம் இருந்து டிராலி பையை சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனை நடத்தினர். அதில், மலேசியா மற்றும் இந்தோனேசிய நாட்டு வனப்பகுதிகளில் வசிக்கும் அபூர்வ வகை ஏகில் கிப்பான் கருங்குரங்கு, ஈஸ்டர்ன் கிரே கிப்பான் குரங்கு என 2 குரங்குகள் உயிருடன் இருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பயணியிடம் விசாரித்தபோது, அவர் அதை வீட்டில் வளர்ப்பதற்காக எடுத்து வந்ததாக கூறியுள்ளார். எனினும், அவரிடம் அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு உரிய ஆவணங்கள் இல்லை.
மேலும், அந்த 2 அபூர்வ குரங்குகளுக்கு நோய் கிருமிகள் இருக்கிறதா, அவற்றை தடுப்பதற்கு தடுப்பு ஊசிகள் எதுவும் போடப்படவில்லை. இதே நிலையில் அந்த 2 குரங்குகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால, நமது நாட்டு விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு நோய்தொற்று பரவிவிடும். இதனால் அந்த 2 அபூர்வ குரங்குகளையும் திருப்பி அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து பாங்காக் கிளம்பி சென்ற தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் அந்த 2 அபூர்வ வகை குரங்குகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சுங்கச் சட்டம் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, சென்னை பயணியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதேபோல், துபாயில் புறப்பட்டு வங்கதேச தலைநகர் டாக்கா, கொல்கத்தா வழியாக நேற்று சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. ஏற்கெனவே, அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்ததால், அனைத்து பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தினர். இச்சோதனையில், துபாயில் இருந்து சென்னையை சேர்ந்த ஆண் பயணியை தனியறையில் வைத்து, அவரது உடலை முழுமையாக பரிசோதித்தனர். இதில், அவரது ஆசனவாய்க்குள் தங்கப் பசையை சிறிய 3 உருண்டைகளாக மறைத்து கடத்தி வந்திருப்பது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. மருத்துவர்களின் உதவியுடன், அந்த 3 உருண்டைகளை வெளியே எடுத்தனர். இதில், ரூ.38 லட்சம் மதிப்பிலான 409 தங்க பசை கடத்தி வரப்பட்டிருப்பது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்து, சென்னை பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று நள்ளிரவு இன்டிகோ ஏர்லைன்ஸ் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியது. அதில், சுற்றுலா பயணியாக சென்று வந்த தமிழ்நாட்டு பயணியின் சூட்கேசை ஸ்கேன் சோதனை செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் குறியீடு போட்டிருந்தனர். அந்த சூட்கேசை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதற்குள் ரூ.14 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்கக் கட்டிகள் கடத்தி வந்திருப்பதை கண்டறிந்தனர். அவற்றை பறிமுதல் செய்து, தமிழ்நாட்டு பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர். முன்னதாக, நேற்று அதிகாலை துபாயிலிருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் வந்திறங்கியது.
அதில் துபாய்க்கு சுற்றுலா சென்று வந்த சென்னை பயணியின் சூட்கேசில் மீண்டும் ஸ்கேன் பண்ணும்படி குறியீடு போடப்பட்டு இருந்தது. அதன்படி, அந்த சூட்கேசை சோதனை செய்ததில், ரூ.14 லட்சம் மதிப்பிலான 150 கிராம் கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டிருப்பதை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அவற்றை பறிமுதல் செய்து, தங்கம் கடத்தி வந்த சென்னை பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர். இப்படி சென்னை விமானநிலையத்தில் நேற்று சுங்கத்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையில், துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.66 லட்சம் மதிப்பிலான 709 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்படடது.
இதுதொடர்பாக 3 பயணிகளை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 அபூர்வ வகை குரங்குகளை பறிமுதல் செய்து, அவற்றை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே அனுப்பி வைத்தனர். அக்குரங்குகளை கடத்தி வந்த சென்னை பயணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடையே பரபரப்பு நிலவியது.
The post வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வந்த ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.