
புதுடெல்லி,
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் தற்போது அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முப்படைகளில் நீண்ட காலம் பணியாற்றி அனுபவம் பெற்றவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முப்படைகளின் முன்னாள் தளபதிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நீண்ட நேரம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.