முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் நாம் தடுத்துவிட முடியும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2 months ago 17

சென்னை,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

முன்னெச்சரிக்கை என்பது இருந்தாலே, எந்தப் பாதிப்பையும் நாம் தடுத்திட முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து வருகிறோம். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்கிறது. இதில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில், தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான மழை கிடைக்கிறது. முன்பெல்லாம் வடகிழக்கு பருவமழையானது பருவம் முழுவதும் பரவலாக பெய்து கொண்டிருந்தது.

சமீப காலமாக காலநிலை மாற்றத்தால், சில நாட்களிலேயே மழை மொத்தமாகப் பெய்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால், சில மணி நேரங்களிலேயே பருவகாலத்திற்கான, மொத்த மழையும் கொட்டி தீர்த்து விடுகிறது. இதனை எதிர்கொள்வது தான் மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள்.

பேரிடர்களின் தாக்கத்தினை திறம்பட எதிர்கொள்ள தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. சரியான நேரத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன்னெச்சரிக்கையினால் நாம் பெரிய அளவிலான சேதங்களை தவிர்க்க முடியும். பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கை தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், நமது அரசு அதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக வானிலைத் தரவுகளை உடனுக்குடன் வழங்க கடந்த 22.08.2024 அன்று தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை நான் திறந்து வைத்தேன். இந்தத் தகவல்கள் பொதுமக்களுக்கும் அவ்வப்போது கிடைத்தால் அவர்கள் தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட வசதியாக இருக்கும் என்பதால்தான் ஒரு முக்கியமான செயலியை உருவாக்கி இருக்கிறோம்.

வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு 'TN Alert' என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது.

மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவ தோழர்கள் தான். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு புயல், கனமழை குறித்த தகவல்களை நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமாக உரியநேரத்தில் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் இந்தக் காலக்கட்டத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும்.

வெள்ளப் பேரிடர்கள் ஏற்படும் பொழுது தாழ்வான பகுதிகளிலிருந்து முன் கூட்டியே வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது மிக முக்கியம். இந்தப் பணிகளை தமிழ்நாடு அரசின் அனைத்து களப் பணியாளர்களும், பொதுமக்களுடன் இணைந்து அவர்களுக்கு அறிவுறுத்தி வெள்ளத்திற்கு முன்னரே நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகளை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்னரே விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்த மூத்த அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்திருக்கிறோம். அவர்கள் மழைக்கு முன்னதாகவே தங்களது பணிகளை தொடங்கியாக வேண்டும்.

எந்த ஒரு சவாலாக இருந்தாலும், அதில் ஈடுபடும் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஓரணியாக நின்று செயல்பட்டால், அதில் வெற்றி என்பது 100 விழுக்காடு சாத்தியம். பருவமழையினால் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பொதுமக்களின் துயர் துடைக்க அரசு நிர்வாகம் மொத்தமும் ஓரணியாக நின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article