
புதுடெல்லி,
வணிக சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது;-
"கடந்த 1 முதல் 3-ந்தேதி வரை சி.பி.ஐ கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏற்கனவே முன்னதாக கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதன்படி, மத்திய அரசின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கை முடிவுகளை கண்டித்தும், வேலைவாய்ப்பின்மையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், MGNREGA தொழிலாளர்களுக்கான ஊதியத்தை முறையாக வழங்க வலியுறுத்தியும் ஜூலை 9-ந்தேதி மத்திய வணிக சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின் மேற்கொள்ளும் தீவிர சிறப்பு திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும், கடந்த 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்ற வாக்காளர் பட்டியல் அடிப்படையில் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இமாசல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் பயிர் சேதத்துக்கு உரிய போதிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. COMPACT-ன் கீழ் போடப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு எதிரானது. எனவே அந்த ஒப்பந்தத்துக்கு சி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. மேலும் இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஆர்.எஸ்.எஸ் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். அதனை மாற்ற வேண்டும் என கூறி வருகிறார்கள். துணை ஜனாதிபதி போன்றோர் அதனை ஆதரித்து பேசி வருகின்றனர். தத்துவார்த்த ரீதியாலான இந்த தாக்குதலை அனைத்து மதசார்பற்ற சக்திகளும் இணைந்து எதிர்த்து செயல்பட வேண்டும்.
மேலும் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேல் நாட்டின் கொடூர நடவடிக்கைகளுக்கு சி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவிக்கிறது. பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் தீர்மானங்களின் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணிப்பது என்பது இந்தியா தனது தனித்துவத்தை விட்டுக்கொடுப்பதாக உள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் உள்ளோம். அதேவேளையில் வரும் ஆகஸ்ட் மாதம் சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கப்படும். கூட்டணி தொடர்பான முடிவை மாநில தலைமை முடிவு செய்யும்.
பா.ஜ.க கட்சியானது அ.தி.மு.க.வை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கால் ஊன்ற பார்க்கிறது, அது முறியடிக்கப்பட வேண்டும். பா.ஜ.க மட்டுமல்ல பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் எந்த அணியும் தமிழகத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.