"பீனிக்ஸ்" சினிமா விமர்சனம்

6 hours ago 4

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான சம்பத்தை நடுரோட்டில் வெட்டி சாய்க்கும் சிறுவன் சூர்யா, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்படுகிறார். சூர்யாவை கொலை செய்ய சம்பத்தின் மனைவியான வரலட்சுமி, தொடர்ந்து ஆட்களை அனுப்புகிறார். செல்லும் அத்தனை பேரையும் அடித்து 'துவம்சம்' செய்கிறார், சூர்யா. ஒருகட்டத்தில் பெரியளவில் கொலைகார கூட்டம் ஒன்றுசேர்ந்து வர, சூர்யா அதை எதிர்கொள்ள தயாராகிறார். அடுத்து நடந்தது என்ன? எம்.எல்.ஏ.வை கொலை செய்யும் அளவுக்கு சூர்யா சென்றது ஏன்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

படம் முழுக்க கோபப்பார்வையுடனே வலம் வரும் சூர்யா, அறிமுக படத்திலேயே 'ஆக்ஷன்' நாயகனாக உருவெடுத்துள்ளார். படம் முழுக்க ரவுடிகளை அவர் பந்தாடும் காட்சிகளை ரசிக்க முடிந்தாலும், நம்ப முடியவில்லை.

வில்லி வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் மீண்டும் முத்திரை படைத்துள்ளார். பிற்பாதியில் வரும் விக்னேஷ் - அபி நக்ஷத்ரா ஜோடியின் காதலும், நடிப்பும் கவனிக்க வைக்கிறது. இருவரின் முடிவும் சோகத்தை உண்டாக்குகிறது. குறைவில்லாமல் நடித்து கொடுத்துள்ளார், தேவதர்ஷிணி. அஜய் கோஷ், திலீபன், சம்பத் ராஜ், 'ஆடுகளம்' முருகதாஸ், ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட அனைவருமே நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர். 

ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு கைதட்டல்களை பெறுகிறது. சாம் சி.எஸ். இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

பரபரப்புடன் செல்லும் 'ஆக்ஷன்' காட்சிகள் பலம். யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாநகராட்சி பூங்கா போல சிறுவர் கூர்நோக்கு இல்லத்தை காட்டியிருப்பது சரியா? இந்தளவு வன்முறை காட்சிகள் தேவையா?

'ஸ்டண்ட்' மாஸ்டர் என்பதால், 'ஆக்ஷன்' காட்சிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து, படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், 'அனல்' அரசு.

பீனிக்ஸ் - 'ஆக்ஷன்' பிரியர்களுக்கு மட்டும்.

Read Entire Article