தஞ்சை அருகே வல்லத்தில் இயங்கி வரும் “வளம் மீட்பு பூங்கா” சுத்தம், சுகாதாரத்தின் முன்னோடியாகவும் விவசாயிகளின் உற்றத் தோழனாகவும் திகழ்கிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? மிக, மிக இயற்கை முறையில் மண்புழு உரம் தயாரித்து விவசாயிகளுக்கு மிகக்குறைந்த விலையில் வழங்கி வருகின்றனர். தஞ்சை அருகே வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. வல்லத்தை சுற்றிகல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என நிறைந்து உள்ளன. எப்போதும் போக்குவரத்து நிறைந்த இப்பேரூராட்சியில் 4743 குடியிருப்பு வீடுகளும், 480 வணிக கட்டிடங்களும் உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வார்டு 12ல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு அமைந்துள்ளதுதான் வளம் மீட்பு பூங்கா. குப்பைகள் சேகரிக்கும் இடம் என்று இதை யாராவது கூறினால் நம்பவே முடியாது. சிறப்பானதொரு பூங்கா போல்தான் இதை மாற்றி உள்ளனர். பேரூராட்சி வார்டுகளில் சேகரிக்கப் படும் குப்பைகள் குவிக்கப்படும் கிடங்கு இதுதான். வல்லத்தை சேர்ந்த விவசாயிகள் மட்டுமின்றி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த விவசாயிகளுக்கு தங்கள் வயலின் தன்மையை உயர்த்த வேண்டும் என்றால் மண்புழு உரத்திற்காக வந்து சேர்வது இந்த வளம் மீட்பு பூங்காவிற்குதான்.
இதுகுறித்து வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் அவர்களை சந்தித்து பேசினோம். இங்கு தினசரி சேகரமாகும் குப்பையின் அளவு 4.23 டன், அதில் 2.54 டன் மக்கும் குப்பையும் 1.04 டன் மக்காத குப்பையும் 0.65 டன் வடிகால் மண் சேகரம் செய்யப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் மூலம் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் திடக்கழிவுகளை உரப்படுக்கை அமைத்து அதில் EM Solution தெளிக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை உரப்படுக்கை மாற்றி அமைக்கப்படுகிறது. இதேபோல் மூன்று முறை மாற்றி அமைக்கப்பட்டு45 நாட்கள் பிறகு மக்கிய திடக்கழிவுகளை சலிக்கப்பட்டு இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பால் இந்த இயற்கை உரம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.பின்னர் நம்மிடம் பேசிய பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் அவர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றுவது குறித்து பேசத் துவங்கினோம். ”குப்பைகள் சேகரிக்கும் இடம் துர்நாற்றம் வீசும் என்று தான்நினைப்பார்கள். ஆனால் இங்கு அந்த குப்பைகளை தரம்பிரித்து விவசாயிகளுக்கு உதவும் வகையில் முழுக்க முழுக்க இயற்கை முறையில் மண்புழு உரமாக்கி மிகக்குறைந்த விலையில் தருகிறோம். இதற்காக மக்கும் திடக்கழிவுகளை கொண்டு உரப் படுக்கை அமைக்கிறோம். 30 நாட்கள் பிறகு மக்கிய திடக்கழிவுகளை மண்புழு உர தொட்டிற்கு மாற்றப்பட்டு அதில் மென்மையான காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகள் தெளிக்கப்பட்டு15 நாட்கள் பிறகு மண்புழுவின் கழிவுகள் மேல்தளத்தில் உள்ளதை சேகரம் செய்து மண்புழு உரமாக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக யூட்ரிலஸ் யூஜினே, ஐசீனியா போட்டிடா என்று இரண்டு வகை மண்புழுக்கள் இந்த உரப்படுக்கையில் வளர்க்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரம் கிலோ ரூ.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளியில் மண்புழு உரத்தை ரூ.20 வரைக்கும் விற்பனை செய்கின்றனர். இருப்பினும் இங்குள்ள தரத்திற்கு வெளியில் கிடைக்காது. இதனால் இதை வாங்க விவசாயிகள் போட்டி போட்டு வருகின்றனர். மாதத்திற்கு1000 கிலோ வரை விற்பனையாகிறது. இங்கு வளர்க்கப்படும் மாடுகளின் சாணம் கூட மண்புழு உரம் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவில் மற்றொரு அம்சமாக சமுதாய தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. பயன்தரும் மரக்கன்றுகள், காய்கறி தோட்டம் அமைத்து பராமரிக்கப்படுகிறது.மண்புழு உரத்தின் தேவை அதிகம் இருப்பதால் குப்பைகளை துகள்களாக அரைத்து விரைவில் உரம் தயாரிக்க இயந்திரமும் வாங்கப்பட்டுள்ளது. விரைவில் அது செயல்பாட்டுக்கு வரும்போது மண்புழு உரம் உற்பத்தி இன்னும் விரைவாகவும், கூடுதலாகவும் கிடைக்கும். இந்த மண்புழு உரத்தை பயன்படுத்தும்போது சாகுபடி நிலங்களில் தன்மை இன்னும் உயர்கிறது. இந்த வளம் மீட்பு பூங்காவின் செயல்பாட்டிற்கு விவசாயிகள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. அனைத்து ஊழியர்களின் கடினமான உழைப்பால் திடக்கழிவு மேலாண்மையில் வல்லம் பேரூராட்சி முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேலும் சிறப்பாக செயல்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறோம் என்கிறார் ராஜசேகர்.
தொடர்புக்கு:
ராம.வெங்கடேசன்: 90805 39802.
The post முன்னுதாரணமாக விளங்கும் “வளம் மீட்பு பூங்கா” appeared first on Dinakaran.