போர்ட் லூயிஸ்,
நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவரான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் திடீர் உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடலநல பாதிப்பு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 9.51 மணிக்கு காலமானார்.
இதனை தொடர்ந்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர், இன்று காலை 8 மணிக்கு அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவருடைய உடலுக்கு மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்றது. இந்த ஊர்வலம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியை அடைந்தது. அங்கு மன்மோகன் சிங்கிற்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே , பூடான் மன்னர் ஜிக்மி ஹிசர் உள்பட பல்வேறு தலைவர்கள் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர், முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நிகம்போத் காட் பகுதியில் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மொரீசியஸ் தீவில் இன்று தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் மையங்களில் மாலை சூரியன் மறையும் வரை தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தது.
இதேபோன்று மொரீசியஸின் பிரதமர் நவீன் ராம்கூலமின் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், தனியார் துறையினரும் கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விடும்படி கேட்டு கொள்ளப்பட்டது. மொரீசியஸ் வெளியுறவு துறை மந்திரி தனஞ்செய் ராம்புல் டெல்லிக்கு வருகை தந்து, மன்மோகன் சிங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் இந்திய பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்ததுடன், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அப்போது பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி மந்திரியாக பணியாற்றினார். இந்து சமயம் அல்லாத முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றவர் ஆவார்.