தண்டையார்பேட்டை: முன்னாள் கவுன்சிலரை தாக்கி பணம் பறித்துச் சென்ற விவகாரத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் அவரது உதவியாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் டேவிட் (40), இவர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் என்னை தாக்கி பணத்தை பறித்து சென்றதாக புகார் அளித்தார். 35வது வார்டு கவுன்சிலராக இருந்தேன்.
2018ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை வடகிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்தேன். வேண்டுமென்றே என்னை அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் பதவியில் இருந்து நீக்கினார். இதுகுறித்து அவர் மீது புகார் அளிக்க முன்னாள் அமைச்சர் வேலுமணி கலந்துகொண்ட கள ஆய்வு நிகழ்ச்சிக்கு வந்தேன். அப்போது என்னை பேசவும் விடவில்லை. என்னுடைய மனுவை வாங்கவும் செய்யாமல் என்னை வெளியே தள்ளி விட்டனர்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி வரும்போது அவரிடம் மனு கொடுக்க தண்டையார்பேட்டை ரத்தினசபாபதி தெருவில் காத்திருந்தபோது மாவட்ட செயலாளர் ராஜேஷின் தூண்டுதலின் பேரில் அவருடைய ஆதரவாளர்கள் நான் வைத்திருந்த பைலை தூக்கிக்கொண்டு ஓடினர். அவர்களை துரத்தி சென்றபோது என்னை அடித்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டனர்.
அதில் என்னுடைய எஸ்பிஐ ஏடிஎம் கார்டு, 10510 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ், உதவியாளர் திருஞானம் மற்றும் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய இரண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் வடகிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post முன்னாள் கவுன்சிலரை தாக்கிய விவகாரம் அதிமுக மாவட்ட செயலாளர், உதவியாளர் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.