திருவனந்தபுரம்: படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தி தன்னிடம் அத்துமீறியதாக கூறிய பிரபல மலையாள நடிகை வின்சி அலோஷியசிடம் விசாரணை நடத்த கலால்துறை தீர்மானித்துள்ளது. மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் வின்சி அலோஷியஸ். விக்ருதி, ஜன கண மன, ரேகா உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ரேகா என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருது கிடைத்துள்ளது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நான் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியது மலையாள சினிமாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் பிறகு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வின்சி அலோஷியஸ் கூறும்போது, ஒரு மலையாளப் படத்தின் படப்பிடிப்பின் போது முன்னணி நடிகர் போதைப்பொருள் பயன்படுத்தியதை தான் பார்த்ததாகவும், போதை மயக்கத்தில் தன்னிடமும், இன்னொரு நடிகையிடமும் அவர் அத்துமீறியதாகவும் கூறினார். இந்த தகவல் மலையாள சினிமா உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறிய அந்த நடிகர் யார்? என்ற விவரத்தை வின்சி அலோஷியஸ் வெளியிட வேண்டும் என்று பலரும் கூறிவருகின்றனர். ஏற்கனவே மலையாள சினிமாவில் பல இளம் நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக நீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக யாரும் இதுவரை புகார் செய்யாததால் போலீசாராலோ, கலால் துறையினராலோ நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது.
இதற்கிடையே படப்பிடிப்பில் ஒரு நடிகர் போதைப்பொருள் பயன்படுத்தியதை தான் பார்த்ததாக நடிகை வின்சி அலோஷியஸ் கூறியதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த கலால்துறை தீர்மானித்து இருக்கிறது. அவர் முறைப்படி புகார் அளித்தால் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தவும் கலால்துறை முடிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
The post முன்னணி நடிகர் மீது அத்துமீறல் புகார்; மலையாள நடிகையிடம் விசாரணை appeared first on Dinakaran.