முத்துப்பேட்டை கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு

3 hours ago 1

*தண்ணீர் வீணாகுவதை தடுக்க மக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த குடிநீர் இணைப்புகளுக்கு கொள்ளிடத்தில் இருந்து மன்னார்குடி, கோட்டூர், திருப்பத்தூர், மாங்குடி, கடுவெளி, சங்கேந்தி வழியாக எடையூர் சம்புக்கு வந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் மெயின் பைப் லைன் வழியாக முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி குடிநீர் டேங்குகளை சென்றடைகிறது.

பின்னர் அருகில் இருக்கும் ஊராட்சி கிராமப் பகுதிகளுக்கு பைப் லைன் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது அதேபோல் எடையூர் சம்பிலிருந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு சென்றடைகிறது.

தினசரி பம்பிங் செய்யப்படும் குடிநீர் அந்தந்த பகுதிக்கு செல்லும்போது குடிநீரில் பாதி அளவு குறைந்து விடுகிறது இடையில் சட்டவிரோத மாக பல குடிநீர் எடுத்து வருவதால் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. இதன் மூலம் குறைவான குடிநீர் வந்து சேருகிறது.

இந்த நீர்வரத்து குறைவால் மக்களுக்கு வழங்கும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது நீண்ட காலமாக முத்துப்பேட்டை பகுதி ஊராட்சி நிர்வாகங்கள் இதை கவலையுடன் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் உள்ள சம்புக்கு வரும் பிரதான குழாயில் புதிய பேரூந்து நிலையம் அருகே உள்ள திருத்துறைப்பூண்டி சாலையில் பூமிக்கு அடியில் செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் இரண்டு மாதமாக சாலையில் குடிநீர் விரையமாகி வருகிறது.

இதில் இரவு பகல் என எந்தநேரமும் பம்பிங் செய்யும் நேரத்தில் ஆறு போல குடிநீர் வீணாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி வியாபாரிகளுக்கும் போக்குவரத்து பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையு+றாக இருப்பது மட்டுமல்லாமல் வெளியேறும் குடிநீர் மாதக்கணக்கில் தேங்கி சாக்கடைநீர் போன்று காட்சியளிகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. கொசுக்கள் புழு பூச்சிகள் காணப்படுகிறது.

இந்த அசுத்தமான நீர் மீண்டும் குழாய் வழியாக சென்று குடிநீர் மூலம் சென்று தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது. பெரியளவில் உயிர் பலிகளை வாங்கும் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் பூமிக்கு அடியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பகலில் கனரக வாகனங்கள் முதல் இரு சக்கர வாகனம் வரை இந்த பள்ளம் தெரியாமல் இறங்கி ஏறுகிறது.

இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. மழைக்காலத்தில் கனரக வாகனங்கள் சிக்கி பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்புகள் உள்ளது. இந்த சாலை திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம் போன்ற பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை என்பதாலும் இதன் அருகே ஏராளமான வியாபார நிறுவனங்கள் உள்ளதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

இதனால் பெரிய விபத்துக்கள் நடைபெறுவதற்கு முன்பு குடிநீர் அவசியத்தை உணர்ந்தும் மக்களின் சுகாதரத்தை காக்கவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post முத்துப்பேட்டை கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article